திருச்சியில் நடந்த சுதந்திர தினவிழாவில் ரூ.30 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் வழங்கினார்


திருச்சியில் நடந்த சுதந்திர தினவிழாவில் ரூ.30 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 15 Aug 2019 11:00 PM GMT (Updated: 15 Aug 2019 8:32 PM GMT)

திருச்சியில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தேசிய கொடி ஏற்றி ரூ.30½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நேற்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இதில் காலை 9.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தேசிய கொடி ஏற்றினார். பின்னர் ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படை, என்.சி.சி. மற்றும் சாரணர் இயக்க மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து சமாதானத்தின் அடையாளமாக வெண் புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை அவர் பறக்க விட்டார். பின்னர் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் 140 பேருக்கு பொன்னாடை அணிவித்து கலெக்டர் கவுரவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

பின்னர் திருச்சி ஆர்.டி.ஓ. அன்பழகன், புள்ளம்பாடி பேரூராட்சி செயல் அதிகாரி சாகுல் அமீது, தொழிலாளர் உதவி ஆணையர் சதீஷ்குமார், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் சிவபாதம், உதவி செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி கார்த்திக் ராஜ், கணக்கர் மும்தாஜ் பேகம் உள்பட பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 80 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை அவர் வழங்கினார். இதைத்தொடர்ந்து 65 பயனாளிகளுக்கு ரூ.30½ லட்சத்தில் நல திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ- மாணவிகள் 670 பேருக்கும் கலெக்டர் பரிசு வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூ, மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உள்பட அதிகாரிகள், பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி

இதுபோல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் ஆணையாளர் ரவிச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றினார். நகர பொறியாளர் அமுதவள்ளி முன்னிலை வகித்தார். விழாவில், 25 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற 30 பணியாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ், 20 ஆண்டுகள் விபத்து இன்றி மாசற்ற முறையில் பணியாற்றிய 2 டிரைவர்களுக்கு தலா 4 கிராம் தங்க பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள், அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டபோது தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து அதனை அணைப்பதற்காக பாடுபட்ட பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை ஆணையாளர் வழங்கினார்.

பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகராட்சி பள்ளி மாணவ- மாணவிகளுக்கும், மாநகராட்சி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் பல்வேறு அமைப்புகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். முன்னதாக அரசு மருத்துவமனை அருகில் உள்ள அண்ணல் காந்தி அஸ்தி மண்டபம், காந்திமார்க்கெட் போர் வீரர் நினைவு சின்னம் ஆகியவற்றில் மலர் வளையம் வைத்து ஆணையாளர் மரியாதை செய்து, காந்தி மார்க்கெட் வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கும் மாலை அணிவித்தார்.

திருச்சி கோர்ட்டு

மேலும் திருச்சி கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி முரளிசங்கர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். விழாவில் மாவட்ட நீதிபதிகள், சப்-கோர்ட்டு நீதிபதிகள், உரிமையியல் கோர்ட்டு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தேசிய கொடி ஏற்றி, அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய 37 ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களைவழங்கினார்.

திருச்சி என்.ஐ.டி.

திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) நடந்த விழாவில் இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் தேசிய கொடி ஏற்றி வைத்து, பாதுகாவலர்கள் மற்றும் என்.சி.சி. மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் அவர் பேசுகையில் ‘திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இருப்பதால் மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும், உலக அளவில் இந்த கல்லூரியை முதல் 500 இடங்களுக்குள் கொண்டு செல்ல ஆசிரியர்கள் பாடுபடவேண்டும்’ என்றார். விழா முடிவில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டது.

வருங்கால வைப்பு நிதி

திருச்சி வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நடந்த சுதந்திர விழாவில் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் வான்லால் மூஆன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார். விழாவில் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

பெல் நிறுவனம்

திருச்சியில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) சார்பில் ஜவகர்லால் நேரு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. பெல் நிறுவன நிர்வாக இயக்குனர் பத்மநாபன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அணிவகுப்பில் சிறந்து விளங்கிய குழுவினருக்கு கோப்பை வழங்கி பாராட்டினார்.


Next Story