அரசு வழங்கும் ரூ.12 ஆயிரத்தின் மூலம் தனி நபர் கழிப்பறை கட்ட வேண்டும் கிராம சபை கூட்டத்தில், கலெக்டர் வேண்டுகோள்


அரசு வழங்கும் ரூ.12 ஆயிரத்தின் மூலம் தனி நபர் கழிப்பறை கட்ட வேண்டும் கிராம சபை கூட்டத்தில், கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 Aug 2019 10:45 PM GMT (Updated: 15 Aug 2019 8:37 PM GMT)

அரசு வழங்கும் ரூ.12 ஆயிரத்தின் மூலம் தனி நபர் கழிப்பறை கட்ட வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

திருச்சி,

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், துரைக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் சிவராசு சிறப்பு பார்வையாளராக பங்கேற்று பேசினார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கிராம மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொள்ள கிராம சபைக் கூட்டங்கள் சிறந்த தளமாக விளங்குகிறது. கிராமப்புற மக்களின் பிரச்சினைகள், தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்து கொள்வது கிராம சபைக் கூட்டத்தின் சிறப்பம்சமாகும். கிராமங்கள் முன்னேற்றமடைய ஊரக பகுதிகளில் சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படுகிறது.

கழிப்பறை

ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப மக்கள் தேவைகளை அறிந்து திட்டங்களை தீட்டுவதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனி அலுவலராக பணிபுரிந்து வருகிறார்கள். 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்பவர்கள் மரம் நட வேண்டும். மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். மழை பெய்வதற்கு வீட்டுக்கொரு மரம் நாம் அனைவரும் வளர்க்க வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு அரசு ரூ.12 ஆயிரம் வழங்குகிறது. இதனை பயன்படுத்தி அனைவரும் 100 சதவீதம் கழிப்பறை கட்டி பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்து நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு பொதுமக்களுடன் கலந்து கொண்டு உணவு சாப்பிட்டார்.

Next Story