ஆன்-லைனில் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை: ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ரெயில் டிக்கெட்டுகள் பறிமுதல் 9 பேர் கைது


ஆன்-லைனில் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை: ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ரெயில் டிக்கெட்டுகள் பறிமுதல் 9 பேர் கைது
x
தினத்தந்தி 1 Sept 2019 3:45 AM IST (Updated: 31 Aug 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

ஆன்-லைனில் ரெயில்வே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

ரெயில்வே டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விற்பனை செய்ய ரெயில்வே நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அனுமதி பெற்றவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிறுவனத்தினர் கடைகளில் இணையதளத்தில் ரெயில்வே டிக்கெட்டுகளை பயணிகளுக்கு முன்பதிவு செய்து கொடுத்து விற்கின்றனர்.

இந்தநிலையில் திருச்சி கோட்ட ரெயில்வேயில் அனுமதி பெற்ற கடைகளில் விதிகளை மீறி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தனிநபர்களின் முகவரியை பயன்படுத்தி ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து அதனை கூடுதல் விலைக்கு விற்று வருவதாகவும், சிலர் உரிய அனுமதி பெறாமலும் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்று வருவதாகவும் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு (ஆர்.பி.எப்.) புகார் வந்தது. அதைத்தொடர்ந்து திருச்சி, பொன்மலை, தஞ்சாவூர், கும்பகோணம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் ரெயில்வே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து விற்கும் கடைகளில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கடந்த 29, 30-ந் தேதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

9 பேர் கைது

இந்த சோதனையின்போது தனி நபர்களின் முகவரிகளை பயன்படுத்தி ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. மொத்தம் 9 கடைகளில் இந்த முறைகேடு கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ரெயில்வே டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்ததோடு 9 பேரையும் கைது செய்தனர். அதேபோல கடைகளில் பயன்படுத்தப்பட்ட கணினிகள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன. 

Next Story