முருகாபாடி கூட்ரோடு அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலி


முருகாபாடி கூட்ரோடு அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 5 Sep 2019 10:15 PM GMT (Updated: 5 Sep 2019 8:26 PM GMT)

முருகாபாடி கூட்ரோடு அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போளூர், 

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா ஓதலவாடியை அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 32), விவசாயி. இவருடைய மனைவி மோனிகா (25). இவர்களது மகள் திவ்யதர்ஷினிக்கு (3) இன்று (வெள்ளிக்கிழமை) பிறந்தநாளாகும். எனவே மகளுக்கு பிறந்தநாள் விழா கொண்டாட முடிவு செய்த ஜெயக்குமார், போளூர் அருகே உள்ள எட்டிவாடி கிராமத்தில் வசிக்கும் அக்காள் முத்தம்மாளை அழைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பின்னர் அக்காளை விழாவுக்கு வருமாறு அழைத்துவிட்டு, அவரது 3 குழந்தைகளை செங்குணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடச்சென்றார். பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு ஊருக்கு புறப்பட்டார்.

முருகாபாடி கூட்ரோடு அருகில் சென்ற போது, வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் திடீரென இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயக்குமார், சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதனிடையே விபத்து நடந்ததும் காரை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு டிரைவர் ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஜெயக்குமாரின் மனைவி மோனிகா போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்.

முன்னதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் திரண்டனர். அப்போது அவர்கள் இந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடப்பதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கூறினர்.

Next Story