ஊட்டி அருகே 3 நாய்களை, சிறுத்தைப்புலி அடித்து கொன்றது - கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை


ஊட்டி அருகே 3 நாய்களை, சிறுத்தைப்புலி அடித்து கொன்றது - கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Sep 2019 10:30 PM GMT (Updated: 5 Sep 2019 8:32 PM GMT)

ஊட்டி அருகே பைக்காராவில் 3 நாய்களை சிறுத்தைப்புலி அடித்து கொன்றது. இதையடுத்து சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தைப்புலி, காட்டெருமை, கடமான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதிகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதாலும், அதன் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாலும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன. குறிப்பாக வனப்பகுதிகளை ஒட்டி உள்ள பகுதிகளில் காட்டு யானை மற்றும் காட்டெருமையால் மக்கள் பாதித்து வருகின்றனர். இதற்கிடையே நீலகிரி வனப்பகுதிகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

மேலும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவதால், மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி அருகே வேலிவியூ பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்ட ஆடுகளை புதரில் மறைந்து இருந்து சிறுத்தைப்புலி தாக்கியதில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஊட்டி அருகே பைக்காரா பகுதியில் வசித்து வருபவர் பாபு. இவர் மின் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாபு வீட்டில் உள்ள நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. உடனே பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தம் கேட்ட இடத்தை நோக்கி சென்றனர்.

அப்போது சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருந்த 3 நாய்களும் கழுத்து கடிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தன. அதனை தொடர்ந்து வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பார்த்த போது, வீட்டு வளாகத்துக்குள் சிறுத்தைப்புலி நுழைந்து நாய்கள் இருந்த திசையை நோக்கி நடந்து செல்வது பதிவாகி உள்ளது. அதன் பின்னரே நாய்களை சிறுத்தைப்புலி அடித்து கொன்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் தஞ்சம் அடைந்தனர். நாய்கள் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்ததால், அவைகளை தூக்கி செல்ல முடியவில்லை.

ஒரே நேரத்தில் 3 நாய்களை சிறுத்தைப்புலி அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதில் நாய்களை சிறுத்தைப்புலி அடித்து கொன்றது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.

Next Story