ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க கூடுதல் சேவை மையம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க கூடுதல் சேவை மையம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 3 Oct 2019 4:15 AM IST (Updated: 3 Oct 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறையில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க கூடுதல் மையம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மணப்பாறை,

இன்றைக்கு, பெரியவர் முதல் சிறியவர் வரை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயமான ஒன்றாகி விட்டது. வங்கி கடன் என்றாலும், ஆன்மிக தலங்களுக்கு சென்று விடுதிகளில் குடும்பத்துடன் தங்கினாலும் ஆதார் அடையாள அட்டையைத்தான் கேட்கிறார்கள். இதேபோல, அனைத்து தேவைகளுக்கும் ஆதாரமாக ஆதார் அட்டை விளங்குகிறது.

இதற்காக விண்ணப்பிக்க அதிகாரிகளை தேடி பொதுமக்கள் செல்வதை தவிர்க்கும் பொருட்டு முக்கியமான இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த மையங்களை பொதுமக்கள் நாடி தங்களுக்கு புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். அதேபோல ஏற்கனவே வாங்கிய ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமானாலும் இந்த இ-சேவை மையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், மணப்பாறையில் உள்ள தாலுகா அலுவலகத்தின் ஒரு பகுதியில் ஆதார் அடையாள அட்டை எடுப்பதற்கும், திருத்தம் செய்து கொள்வதற்கும் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சேவை மையத்தில் ஒரு நாளைக்கு 40 பேருக்கு மட்டுமே ஆதாருக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த சேவை மையத்திற்கு மணப்பாறை, மருங்காபுரி ஆகிய தாலுகாக்கள் மட்டுமின்றி கரூர் மாவட்டம் தோகைமலை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை உள்ளிட்ட ஒன்றியங்களில் இருந்தும் பொதுமக்கள் வருகை தருகின்றனர்.அந்தவகையில் விடுமுறை நாட்களை தவிர்த்து நாள் ஒன்றுக்கு 800-க்கும் மேற்பட்டோர் மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் திரள்கின்றனர்.

அவர்களில் பெண்கள் சிலர் தங்களது கைக்குழந்தைகளுடனும் காத்திருக்கின்றனர். பல முதியவர்களும் வரிசையில் காத்திருக்கின்றனர். மாணவ, மாணவிகள் இதற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களில் 40 பேரிடமே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மற்றவர்களுக்கு குறிப்பிட்ட நாளில் வருமாறு டோக்கன் வழங்கப்படுகிறது. அந்த டோக்கனில் ஒரு மாதம், இரண்டு மாதம் தள்ளிக்கூட தேதி குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆதார் அடையாள அட்டை பெறவும், அதில் திருத்தம் செய்யவும் 2 மாதம் வரை காத்திருக்க வேண்டுமா? என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

ஆகவே, அனைவருக்கும் இந்த சேவை விரைந்து கிடைக்கும் வகையில் மணப்பாறை பகுதியில் கூடுதல் சேவை மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story