திருமருகல் ஒன்றியத்தில் அதிநவீன கருவி மூலம் வயல்களில் மருந்து தெளிக்கும் பணி


திருமருகல் ஒன்றியத்தில் அதிநவீன கருவி மூலம் வயல்களில் மருந்து தெளிக்கும் பணி
x
தினத்தந்தி 3 Oct 2019 11:00 PM GMT (Updated: 3 Oct 2019 6:59 PM GMT)

திருமருகல் ஒன்றியத்தில் அதிநவீன கருவி மூலம் விவசாயிகள் வயல்களில் மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

திருமருகல்,

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 30 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி திருமருகல் ஒன்றியத்தில் 9 ஆறுகள் மூலம் 13 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணைக்கு தண்ணீர் போதிய அளவு வந்து கொண்டிருக்கும் நிலையிலும், திருமருகல் ஒன்றிய பகுதியில் மழை பெய்து வருவதாலும், குறுவை சாகுபடி பொய்த்து போனதாலும் விவசாயிகள் சம்பா சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

விவசாய பணிகள் நாளுக்கு நாள் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மாடுகட்டி ஏர் உழுத விவசாயிகள் பின்னர் டிராக்டர் உழவு மூலம் சாகுபடி செய்து வந்தனர். அடுத்த கட்டமாக அதிநவீன நடவு எந்திரம் மற்றும் விதை தெளிக்கும் எந்திரம், அறுவடை எந்திரம் என பல்வேறு எந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.

அதிநவீன கருவி

இந்தநிலையில் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள வயல் களில் விவசாயிகள் அதிநவீன கருவியான டிராகன் எனப்படும் இலகுரக வானூர்தி மூலம் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி திருமருகல் வேளாண்மை அதிகாரிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடைமடை பகுதியான திருமருகல் ஒன்றிய பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தருணத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் இதுபோன்ற அதிநவீன கருவி மூலம் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்வது சிறந்ததாக உள்ளது. மேலும் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் இதனை பயன்படுத்தினால் சிறு, குறு விவசாயிகளுக்கு நல்ல பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் கூறி னார். இந்த அதிநவீன கருவி மூலம் திருமருகல் ஒன்றியத்தில் மேல போதனூர், கீழ தஞ்சாவூர், உத்தமசோழபுரம், சோழங்கநல்லூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story