நெல்லுக்கான கொள்முதல் விலை 2 நாட்களில் அறிவிக்கப்படும் அமைச்சர் துரைக்கண்ணு பேட்டி


நெல்லுக்கான கொள்முதல் விலை 2 நாட்களில் அறிவிக்கப்படும் அமைச்சர் துரைக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 3 Oct 2019 11:15 PM GMT (Updated: 3 Oct 2019 7:16 PM GMT)

நெல்லுக்கான கொள்முதல் விலை 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் 14 புதிய பஸ்கள் இயக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் துரைக்கண்ணு தலைமை தாங்கி புதிய பஸ்களை இயக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, காரைக்கால், திருவாரூர், திருப்பூர் ஆகிய மார்க்கங்களிலும், சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் மார்க்கத்திலும், தஞ்சையில் இருந்து லால்குடி மார்க்கத்திலும், பட்டுக்கோட்டையில் இருந்து திருச்சி மார்க்கத்திலும் இந்த 14 பஸ்களும் இயக்கப்பட உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 123 புதிய பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

2 நாட்களில் அறிவிக்கப்படும்

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை வருவாய் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளேன். இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு தேவைப்பட்டால் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் என்னிடம் தெரிவித்துள்ளார்.நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறும். அந்த தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் ஓட்டுக்கு பணம் வழங்கப்படும் என்பது பொய்யான குற்றச்சாட்டு ஆகும். இன்னும் 2 நாட்களில் நெல்லுக்கான கொள்முதல் விலை அறிவிக்கப்படும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், முன்னாள் எம்.பி. பாரதிமோகன், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பொன்முடி, பொது மேலாளர் அனு‌‌ஷம், முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், கும்பகோணம் நிலவள வங்கி தலைவர் சோழபுரம் அறிவழகன், திருவிடைமருதூர் நிலவள வங்கி தலைவர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story