கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் வேதனை
பேரையூர் பகுதியில் போதிய மழை பெய்தும் கண்மாய்கள், ஓடைகள், வரத்துக்கால்வாய்கள் தூர்வாரப்படாததால் நீர் வரத்து இல்லாத நிலையில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பேரையூர்,
பேரையூர் பகுதியில் கடந்த மே முதல் செப்டம்பர் மாதம் வரை 434 மி.மீ. மழை பெய்துள்ளது. மே மாதத்தில் 28 மி.மீ., ஜூனில் 139 மி.மீ., ஜூலையில் 18 மி.மீ., ஆகஸ்டில் 42 மி.மீ., செப்டம்பரில் 207 மி.மீ. மழை பெய்துள்ளது.
இந்த மழையால் மானாவாரி விவசாய பயிர்கள் நல்ல விளைச்சல் அடைந்து வருகிறது. ஆனால் தென் மேற்கு பருவமழை பேரையூர் பகுதிக்கு போதுமான அளவுக்கு பெய்துள்ள நிலையிலும் நிலத்தடி நீர் மட்டம் ஓரளவே உயர்ந்துள்ளது. கடந்த 2 வருடங்களாக வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாத நிலையில் நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டது.
தற்போது பெய்துள்ள தென் மேற்கு பருவ மழையால் ஓரளவு நிலத்தில் ஈரப்பதம் உள்ளது. ஆனால் கால்வாய்கள், ஓடைகள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளால் குளங்கள், கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லை. ஏராளமான கண்மாய்களை கருவேல மரங்கள் ஆக்கிரமித் துள்ளன.
பேரையூர், கிளாங்குளம், சின்னாரெட்டிபட்டி உள்ளிட்ட பல கண்மாய்கள், அதன் வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் நல்ல மழை பெய்தும் நீர் வரத்து இல்லாமல் போய் விட்டது என்று இப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
மேலும் வரத்துக்கால்வாய்களில் பல்வேறு இடங்களில் ஏராளமான தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளதாலும் நீர் வரத்து இல்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
எனவே வடகிழக்கு பருவ மழைக்கு முன்பே இப்பகுதி கண்மாய்கள், வரத்துக்கால்வாய்கள், ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போர்க்கால அடிப்படையில் தூர்வாருவதற்கு உடனடி நடவடிக்கை எடுத்திட மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story