புஞ்சைபுளியம்பட்டியில் கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண் தீக்குளித்து தற்கொலை - போலீஸ் விசாரணை
புஞ்சைபுளியம்பட்டியில் கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
புஞ்சைபுளியம்பட்டி,
சென்னை ஆவடி கோவில்பதாகை என்ற இடத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி பொன்மணி (வயது 30). இவர்களுக்கு 2 பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் களுடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராஜா (35). லாரி டிரைவர். இவருடைய மனைவி ஜமுனா (35). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
அருகருகே வசித்ததால் பொன்மணிக்கும், ராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களுடைய கள்ளக்காதல் இருவருடைய வீட்டுக்கும் தெரியவந்தது.
இந்தநிலையில் ராஜாவும், பொன்மணியும் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி இந்திரா நகரில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்கள். பின்னர் ராஜா லாரி டிரைவராகவும், பொன்மணி அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கிலும் வேலைக்கு சென்று வந்தார்கள். இந்தநிலையில் ராஜாவுக்கு தன்னுடைய மகனை பார்க்கவேண்டும் என ஆசை ஏற்பட்டது. அதனால் தான் சென்று பார்த்துவிட்டு வரட்டுமா? என்று பொன்மணியிடம் நேற்று முன்தினம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ராஜா வெளியே சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பொன்மணி உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் உடல் கருகிய அவர் அலறி துடித்தார். உடனே ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் பொன்மணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று முன்தினம் இரவு பொன்மணி இறந்துவிட்டார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ராஜாவும், பொன்மணியும் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது தீக்குளிப்பதற்கு முன் பொன்மணி எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், ‘நான் தவறு செய்துவிட்டேன். ராஜா மாமா நீ நல்லா இருக்கணும். நான் யாரை நம்புவது என்று தெரியவில்லை‘ என்று எழுதியுள்ளார்.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story