குஜிலியம்பாறை அருகே, குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


குஜிலியம்பாறை அருகே, குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 Oct 2019 10:15 PM GMT (Updated: 4 Oct 2019 4:30 PM GMT)

குஜிலியம்பாறை அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறை தாலுகா, கோட்டாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட நாச்சிபட்டியில் சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் காவிரி கூட்டுக் குடிநீரும் 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகம் செய்யப்பட்டது.

ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வைரம்பட்டி, முத்தழகுபட்டி, மு.களத்தூர் ஆகிய ஊர்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்தனர். ஊராட்சி நிர்வாகம் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய ஆழ்துளை கிணறு அமைக்கவில்லை.

இந்நிலையில் குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் கோட்டாநத்தம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வருகிற 11-ந் தேதிக்குள் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும், அதுவரை காவிரி கூட்டுக் குடிநீர் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story