திருச்சி கொள்ளை சம்பவம் எதிரொலி: நாகர்கோவில் நகை கடை உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை


திருச்சி கொள்ளை சம்பவம் எதிரொலி: நாகர்கோவில் நகை கடை உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
x
தினத்தந்தி 4 Oct 2019 10:00 PM GMT (Updated: 4 Oct 2019 8:25 PM GMT)

திருச்சி கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து நாகர்கோவிலில் அனை த்து நகை கடைகளிலும் எச்சரிக்கை அலாரம் பொருத்த வேண்டும் என்று நகை கடை உரிமையாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் போலீசார் வலியுறுத்தினர்.

நாகர்கோவில்,

திருச்சியில் பிரபல நகை கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நகை கடைகளிலும் பாதுகாப்பை அதிகரிக்கும்படி போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இதே போல நாகர்கோவிலில் உள்ள நகை கடைகளிலும் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோட்டார் போலீஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் நாகர்கோவிலில் உள்ள நகை கடை உரிமையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பேசுகையில் கூறியதாவது:-

நாகர்கோவிலில் மொத்தம் 140 நகை கடைகள் இருப்பதாக கூறி உள்ளர்கள். எனவே நகை கடைகளில் இரவு நேரத்தில் நடைபெறும் கொள்ளை சம்பவத்தை தடுக்க கட்டாயம் காவலாளி ஒருவரை பணியில் அமர்த்த வேண்டும். கடைகளின் 4 புறமும் மின் விளக்குகளை எரிய விட வேண்டும். அப்படி மின் விளக்குகள் எரிந்தால் தான் மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க முடியும்.

ஒவ்வொரு நகை கடைகளிலும் உள்புறமும், வெளிப்புறமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது கட்டாயம். அதோடு எச்சரிக்கை அலாரமும் பொருத்த வேண்டும். இதன் மூலம் நகை கடைகளுக்குள் யாரேனும் மர்ம நபர்கள் நுழைந்தால் அலாரம் அடித்து காட்டிக் கொடுத்து விடும். இவற்றை ஒவ்வொரு நகை கடை உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story