நகைக்கடை கொள்ளையன் சுரேஷ் புதுவையில் குடியிருந்தவர் இறால் பண்ணை அதிபர் வீட்டில் 300 பவுன் கொள்ளையில் தொடர்பா?


நகைக்கடை கொள்ளையன் சுரேஷ் புதுவையில் குடியிருந்தவர் இறால் பண்ணை அதிபர் வீட்டில் 300 பவுன் கொள்ளையில் தொடர்பா?
x
தினத்தந்தி 5 Oct 2019 11:30 PM GMT (Updated: 5 Oct 2019 11:25 PM GMT)

நகைக்கடை கொள்ளையன் சுரேஷ் புதுவையில் குடியிருந்தவர் ஆவார். எனவே இங்குள்ள இறால் பண்ணை அதிபர் வீட்டில் 300 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் கொள்ளையடித்ததில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

புதுச்சேரி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் புகுந்த கொள்ளையர்கள் தங்க மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கில் திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொள்ளை கும்பலின் தலைவனாக திருவாரூர் முருகன் உள்ளார். இவர் மீது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. கார்களில் சென்று திட்டமிட்டு கொள்ளையடிப்பதில் இவர் கைதேர்ந்தவர்.

இந்த கொள்ளை வழக்கில் முருகனின் சகோதரி மகன் சுரேசும் தேடப்பட்டு வருகிறார். சுரேஷ் ஏற்கனவே புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் குடியிருந்தவர். இதனால் அவருக்கு புதுவையை பற்றியும், இங்குள்ள செல்வந்தர்கள் பற்றியும் நன்கு தெரியும்.

இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந்தேதி முத்தியால்பேட்டையை சேர்ந்த இறால் பண்ணை அதிபர் சரவணன் வீட்டில் 300 பவுன் நகைகளும், ரூ.10 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டது. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் துணிச்சலாக நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அப்போது கண்காணிப்பு கேமராவின் மூலம் எடுக்கப்படும் காட்சிகள் பதிவாகும் கருவியையும் (ஹார்ட் டிஸ்க்) அந்த கும்பல் எடுத்துச் சென்றது.

இதனால் அந்த கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பதை போலீசாரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அருகில் உள்ள வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் கொள்ளையர்கள் குறித்த சரியான விவரங்களை போலீசாரால் சேகரிக்க முடியவில்லை.

இந்த நிலையில் லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த சுரேஷ் புதுவையில் ஏற்கனவே குடியிருந்தவர் என்பதால் அவர் கொடுத்த தகவலின் பேரில் திருவாரூர் முருகன் தலைமையில் இறால் பண்ணை அதிபர் வீட்டில் நகைகள், பணத்தை கொள்ளையடித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே இந்த வழக்கினை மீண்டும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story