திருச்சி பொன்மலையில் பயங்கரம் தாயை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன் கைது


திருச்சி பொன்மலையில் பயங்கரம் தாயை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன் கைது
x
தினத்தந்தி 2 Nov 2019 11:15 PM GMT (Updated: 2 Nov 2019 6:44 PM GMT)

திருச்சி பொன்மலையில் தாயை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி கணேசபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் திருச்சி மாநகராட்சியில் துப்புரவுபணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பாப்பாத்தி. இவர் காட்டூர் கைலாஷ்நகர் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுடைய மகன் பிரகாஷ் (30). பி.பி.ஏ. பட்டதாரியான இவர், படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பிரகாஷுக்கு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இந்தநிலையில் பிரகாஷின் தாய் பாப்பாத்திக்கும், அவரது மருமகள் வெண்ணிலாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு முற்றியதால் மனைவி வெண்ணிலாவை அவரது சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்துக்கு பிரகாஷ் நேற்று முன்தினம் அழைத்து சென்று விட்டு, விட்டு நள்ளிரவு 1 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது பிரகாஷ் தனது தாயிடம் இனி மருமகளால் தொல்லை இல்லை. ஒட்டன்சத்திரத்தில் உள்ள அவள் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்று கூறி உள்ளார். இதையடுத்து பாப்பாத்திக்கும், பிரகாஷுக்கும் தகராறு ஏற்பட்டது.

இரும்பு கம்பியால் அடித்து கொலை

அவர்களுக்குள் ஒருமணிநேரமாக வாக்குவாதம் நடந்த நிலையில், ஆத்திரம் அடைந்த பிரகாஷ் அருகே கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தாயை தாக்கினார். இதனை கண்டு தடுக்க ஓடி வந்த தந்தை ஆறுமுகத்தையும் தாக்கினார். இந்த தாக்குதலில் பாப்பாத்தி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சாய்ந்தார். ஆறுமுகமும் படுகாயம் அடைந்தார். அதன்பிறகு பிரகாஷ் அங்கிருந்து சென்று விட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயத்துடன் கிடந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு பாப்பாத்தியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆறுமுகம் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன்பின் பிரகாஷ் பொன்மலை போலீசாரிடம் சரண் அடைந்தார். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மாமியார்-மருமகள் இடையே நடந்த தகராறு காரணமாக தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story