2,970 பெண்களுக்கு ரூ.7 கோடியில் மானிய விலை ஸ்கூட்டர் அமைச்சர் காமராஜ் பேச்சு


2,970 பெண்களுக்கு ரூ.7 கோடியில் மானிய விலை ஸ்கூட்டர் அமைச்சர் காமராஜ் பேச்சு
x
தினத்தந்தி 3 Nov 2019 11:00 PM GMT (Updated: 3 Nov 2019 8:43 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 2,970 பெண்களுக்கு ரூ.7 கோடியில் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் உழைக்கும் பெண்களுக்கு மானியத்துடன் கூடிய ஸ்கூட்டர் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். நாகை செல்வராசு எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு 715 பேருக்கு ரூ.1 கோடியே 78 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் மானியத்துடன் கூடிய ஸ்கூட்டர்களையும், 6 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.33 லட்சம் மதிப்பிலான வங்கி கடன் உதவிக்கான ஆணைகளையும் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

பெண்கள் தங்கள் சொந்த காலிலே நிற்க வேண்டும். அவர்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தொலைநோக்கு சிந்தனையுடன் பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதில் உள்ள சிரமங்களை உணர்ந்து இந்தியாவிலேயே மானியத்துடன் கூடிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2,970 பேருக்கு ரூ.6 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனை உழைக்கும் பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதில் கூடுதல் கலெக்டரும், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனருமான கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், உதவி கலெக்டர் ஜெயபிரீதா, கூட்டுறவு சங்க தலைவர்கள் மூர்த்தி, மணிகண்டன், கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story