தனியார் தொழிற்சாலையில் திருடிய மராட்டிய தொழிலாளி கைது
தனியார் தொழிற்சாலையில் திருடிய மராட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 16 கிலோ வெள்ளிக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூரு,
பெங்களூரு ஸ்ரீராமபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆறுமுகம் என்பவர் வெள்ளி ஆபரண தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருடைய தொழிற்சாலையில் மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் சாங்கோலாவை சேர்ந்த பாபு (வயது 26) என்பவர் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவர் தொழிற்சாலையில் வெள்ளிக்கட்டிகளை உருக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். பாபு, பெங்களூரு மல்லேசுவரத்தில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் தொழிற்சாலையில் இருந்து வெள்ளிக்கட்டிகளை பாபு திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆறுமுகம் ஸ்ரீராமபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த பாபுவை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது கடந்த ஒரு ஆண்டுகளாக வெள்ளிக்கட்டிகளை உருக்கும் பணியின் போது கொஞ்சம், கொஞ்சமாக வெள்ளிக்கட்டிகளை திருடி சென்றது தெரியவந்தது. கைதானவரிடம் இருந்து 16 கிலோ வெள்ளிக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story