தாராள வர்த்தக ஒப்பந்தம் புறக்கணிப்பு: பிரதமர் மோடிக்கு கர்நாடக அரசு நன்றி


தாராள வர்த்தக ஒப்பந்தம் புறக்கணிப்பு: பிரதமர் மோடிக்கு கர்நாடக அரசு நன்றி
x
தினத்தந்தி 6 Nov 2019 11:15 PM GMT (Updated: 6 Nov 2019 6:27 PM GMT)

தாராள வர்த்தக ஒப்பந்தத்தை புறக்கணித்ததால் பிரதமர் மோடிக்கு கர்நாடக அரசு நன்றி தெரிவித்துள்ளது.

பெங்களூரு, 

தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் சேர மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது. இதற்காக பிரதமர் மோடிக்கு கர்நாடக அரசு நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா சேர்ந்தால், பால் பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதுகுறித்து மத்திய அரசின் தொழில்துறைக்கு நான் கடந்த மாதம் கடிதம் எழுதினேன். இந்த நிலையில் அந்த ஒப்பந்தத்தில் இந்தியா சேரவில்லை. இதனால் பால் பண்ணை தொழிலை நம்பியுள்ள இந்திய விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகம் பால் உற்பத்தியில் நாட்டிலேயே 2-வது இடத்தில் உள்ளது. கர்நாடகத்தில் 23 ஆயிரத்து 569 கிராமங்களில் இருந்து பால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 16 ஆயிரத்து 229 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ளனர். கர்நாடகத்தில் 25 லட்சம் விவசாயிகள் பால் பண்ணை தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். இதில் 9 லட்சம் பேர் பெண்கள்.

மாநிலத்தில் தினமும் 77.22 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. தினமும் ரூ.19.88 கோடி விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்படுகிறது. கர்நாடக பால் கூட்டுறவு அமைப்பு 2018-19-ம் ஆண்டில் ரூ.14 ஆயிரத்து 446 கோடி வர்த்தகம் செய்துள்ளது. தாராள வர்த்தக ஒப்பந்தத்தை புறக்கணித்ததால் பிரதமர் மோடி, முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு மந்திரி பிரபுசவான் கூறினார்.

Next Story