கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்குவதை தடுக்க வேண்டும் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்


கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்குவதை தடுக்க வேண்டும் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Nov 2019 11:00 PM GMT (Updated: 21 Nov 2019 7:11 PM GMT)

கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்குவதை தடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

சீர்காழி,

இந்து கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை முறைகேடாக கையகப்படுத்தி ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்க உள்ளதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டம் உள்ளதாக கோர்ட்டில் அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. நமது முன்னோர்களும், மன்னர்களும், செல்வந்தர்களும் கோவில்களில் தினமும் பூஜைகள், வழிபாடுகள் தடையின்றி நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், தங்க, வைர நகைகளை கோவிலுக்கு எழுதி வைத்தனர். கோவிலை சார்ந்து வாழும் குருக்கள், ஓதுவார், இசைக்கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்வாதாரத்திற்குமான ஏற்பாடுகளையும் செய்து வைத்தனர். கோவில்களை முறைப்படி தர்மகர்த்தாக்கள் பராமரித்து வந்தனர். ஆனால், தமிழக அரசு அவர்கள் மீது குறைகூறி இந்துசமய அறநிலையத்துறை என்ற பெயரில் கோவில்களை பறித்து கொண்டது.

கோவில்கள், கோவில் சொத்துக்களை நிர்வகிக்கவும், பராமரிக்கவும், பாதுகாக்கவுமே இந்துசமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அறநிலையத்துறையின் நிர்வாக சீர்கேட்டால் ஏராளமான ஏக்கர் நிலங்கள் காணாமல் போயுள்ளன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஐம்பொன் சாமி சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. இதற்கும் மேலாக பல கோவில்கள் காணாமல் போயுள்ளன. இதற்கு உடந்தையாக இருந்த பல அறநிலையத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவில்களை காப்பாற்ற...

இந்துசமய அறநிலையத்துறை கோவில்களை நிர்வகிக்கும் தனது கடமையில் இருந்து தவறிவிட்டது. இந்தநிலையில் தமிழக அரசு, கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கே பட்டா வழங்க உள்ளதாக ஆணை வெளியிட்டிருப்பதோடு, கோர்ட்டிலும் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்ளது. கோவில் நிலங்கள் கோவிலுக்கே சொந்தம்.

அரசின் உத்தரவு இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. இவ்வாறு பட்டா வழங்கினால் காலப்போக்கில் கோவில்கள் அழிந்துபோக வாய்ப்பு உள்ளது. எனவே, கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்குவதை தடுத்து, கோவில்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது இந்துமக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் பார்த்திபன், மாவட்ட அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட பொறுப்பாளர் மணிகண்டன், தனசேகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story