ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு: கிராமமக்கள் சாலை மறியல்


ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு: கிராமமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Dec 2019 11:00 PM GMT (Updated: 11 Dec 2019 8:15 PM GMT)

எல்லப்புடையாம்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியம் எல்லப்புடையாம்பட்டி ஊராட்சியில் கம்மாளப்பட்டி, புறாக்கல் உட்டை, எல்லப்புடையாம்பட்டி, கெளாப்பாறை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற அலுவலகம் எல்லப்புடையாம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ளது. ஊராட்சி மன்ற அலுவலகம் சேதமடைந்து இருப்பதால், இங்குள்ள அலுவலகத்தில் அலுவலக செயல்பாடுகள் நடைபெறவில்லை.

இதையடுத்து, கெளாப்பாறையில் உள்ள அரசு பல்நோக்கு கட்டிடத்திற்கு ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றப்பட்டு இயங்கி வந்தது. எல்லப்புடையாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கெளாப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவரே தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுவதால், ஊராட்சி மன்ற அலுவலகம் அதே ஊரில் இயங்கி வருகிறது. தற்போது உள்ளாட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுதாக்கல்கெளாப்பாறையில் உள்ள கிளை அலுவலகத்தில் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்டோர் கிராமமக்கள் அரூர்- சித்தேரி சாலையில், எல்லப்புடையாம்பட்டியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் வளர்ச்சி திட்டப்பணிகளில் எல்லப்புடையாம்பட்டி கிராமம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கிராம மக்கள் அரூர் உதவி கலெக்டர் பிரதாப்பிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த சாலை மறியல் குறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் எல்லப்புடையாம்பட்டியில் உள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் வினியோகம், மனுக்கள் பெறும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story