பிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகம்: தஞ்சை பெரியகோவிலில் கொடிமரம் பாலி‌‌ஷ் போடுவதற்காக சாரம் அமைக்கும் பணி


பிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகம்: தஞ்சை பெரியகோவிலில் கொடிமரம் பாலி‌‌ஷ் போடுவதற்காக சாரம் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 24 Dec 2019 10:45 PM GMT (Updated: 24 Dec 2019 6:42 PM GMT)

பிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தஞ்சை பெரியகோவிலில் கொடிமரம் பாலிஷ் போடப்படுகிறது. இதற்காக சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

தஞ்சை பெரியகோவிலில் அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 5-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பெரியகோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோபுரங்கள் சீரமைப்பு

குறிப்பாக பெரியகோவிலில் தரைதளம் சீரமைப்பு, புல்தரை சீரமைப்பு, கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி, பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், முருகன் சன்னதிகளின் கோபுரங்களும் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. கோவில் வளாகத்தில் உள்ள திருச்சுற்று மாளிகை சீர் செய்யப்பட்டு அங்குள்ள லிங்கங்களை பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தொடாத வகையில் தடுப்புக்கட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 2-ந்தேதி பாலாலயம் நடந்தது. இதைத்தொடர்ந்து அனைத்து மூலவர் சன்னதிகளும் நடைசாத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலாலயம் முடிந்த பின்னர் பாலாலய திருமேனிகளில் அருட் சக்தியானது வேதாசிகம முறைப்படி சேர்க்கப்பட்டு, அவைகள் மட்டுமே பெருவுடையார் சன்னதி முன் உள்ள மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக எழுந்தருள செய்யப்பட்டன. தற்போது அதனை பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

கொடிமரத்துக்கு பாலி‌‌ஷ்

தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டுத்தேர்வு விடு முறைவிடப்பட்டுள்ளதால் பெரியகோவிலுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகஅளவில் உள்ளது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை பூஜை நடைபெறுகிறது. இதற்காக இரும்புத்தூண்கள் அமைக்கப்பட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை பெரியகோவிலில் பெரியநாயகி அம்மன் சன்னதிக்கும், நந்தி பெருமானுக்கும் முன்பாக கொடிமரம் உள்ளது. இந்த கொடிமரமும் பாலி‌‌ஷ் போடப்படுகிறது. இதற்காக கொடிமரத்தை சுற்றிலும் சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. சாரம் அமைக்கும் பணி முடிந்த பின்னர் கொடிமரத்தின் மீது பொருத்தப்பட்டுள்ள உலோகம் கழற்றப்பட்டு அதற்கு பாலி‌‌ஷ் போடப்படுகிறது.

பணிகள் தீவிரம்

மேலும் கொடிமரமும் சரி செய்யப்பட்டு, அதன் பின்னர் பாலி‌‌ஷ் போடப்பட்ட உலோகம் அதன் மீது பொருத்தப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Next Story