புதுவைக்கு சுற்றுலா வந்த இடத்தில் கடல் அலையில் சிக்கி அண்ணன்-தம்பி பரிதாப சாவு


புதுவைக்கு சுற்றுலா வந்த இடத்தில் கடல் அலையில் சிக்கி அண்ணன்-தம்பி பரிதாப சாவு
x
தினத்தந்தி 12 Jan 2020 11:00 PM GMT (Updated: 12 Jan 2020 9:14 PM GMT)

புதுவைக்கு சுற்றுலா வந்த இடத்தில் கடல் அலையில் சிக்கி அண்ணன்-தம்பி பரிதாபமாக இறந்தனர்.

காலாப்பட்டு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு கஜேந்திராநகர் பகுதியை சேர்ந்தவர்கள் மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் 3 பஸ்களில் பெங்களூருவில் இருந்து புறப்பட்டனர். வழியில் பல்வேறு கோவில்களில் தரிசனம் செய்த அவர்கள் நேற்று காலை மேல்மருவத்தூர் கோவிலில் தரிசனம் செய்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி வந்தனர். வழியில் ஆரோவில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு பிள்ளைச்சாவடி கடற்கரை பகுதிக்கு வந்தனர். பஸ்சை அங்கு நிறுத்தி விட்டு சிலர் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். பெண்கள், சிறுவர்கள், வாலிபர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர்.

கடலில் மூழ்கிய அண்ணன்-தம்பி

இதில் கார்த்திக்(வயது26), முனிராஜ்(17), ரமேஷ்(21), கவுதம்(22), விவேக்(19) ஆகிய 5 பேரும் சற்று தூரம் நடந்து சென்று காலாப்பட்டு கடல் பகுதியில் சென்று குளித்தனர். அண்ணன்-தம்பியான கவுதம், விவேக் இருவரும் சற்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கி இருவரும் கடலில் மூழ்கினர்.

இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என அலறினர். அவர்களது சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த மீனவர்கள், கடலில் குதித்து அலையில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். கடலில் மூழ்கியவர்களை மீட்க அவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் மாலையில் பொம்மையார்பாளையம் கடற்கரையில் கவுதம், விவேக் ஆகியோரது உடல்கள் கரை ஒதுங்கின. உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுற்றுலா வந்த இடத்தில் கடலில் மூழ்கி அண்ணன், தம்பி பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story