மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க முடியாமல் போலீஸ் திணறல்: குண்டர் சட்டம் பாய்ந்தும் பயனில்லை


மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க முடியாமல் போலீஸ் திணறல்: குண்டர் சட்டம் பாய்ந்தும் பயனில்லை
x
தினத்தந்தி 19 Jan 2020 4:15 AM IST (Updated: 18 Jan 2020 11:55 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்த போதிலும் அதனால், கஞ்சா விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.

தேனி,

தேனி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை சட்டவிரோதமாக கஞ்சா பயிரிடப்பட்டு வந்தது. வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிட்டு விற்பனைக்கு கொண்டு வருவதும், பிற மாவட்டங்களுக்கு கடத்திச் செல்லும் சம்பவங்களும் நடந்து வந்தன. போலீசார் மற்றும் வனத்துறையினர் மேற்கொண்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டது. நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் வனப்பகுதியில் கஞ்சா பயிரிட முடியாத அளவுக்கு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரத்தில் தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து அமோகமாக நடந்து வருகிறது. தேனி, அல்லிநகரம், கம்பம், போடி, ஓடைப்பட்டி, உத்தமபாளையம், கூடலூர், வருசநாடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கஞ்சா விற்பனை செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்க முடியவில்லை.

மாவட்டத்தில் எங்கும் கஞ்சா பயிரிடப்படாத நிலையில், சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு கடத்தி வந்த பலரை போலீசார் கைது செய்துள்ளனர். கஞ்சா விற்பனையை தடுக்க வியாபாரிகள் சிலரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும், அவர்களை மீண்டும் போலீசார் கைது செய்வதும் வாடிக்கையாக உள்ளது.

கூட்டுத் தொழில் போல், ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களும் கஞ்சா விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் அதிகம் உள்ளன. பல்வேறு இடங்களிலும் சில்லறையில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்யும் போலீசார், அவர்களுக்கு கஞ்சாவை வழங்கிய மொத்த வியாபாரிகள் யார்? அவர்களின் பின்னால் யாரெல்லாம் உள்ளனர்? என்று புலனாய்வு செய்வது இல்லை.

வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்படுவதும், போலீசார் வழக்குப்பதிவு செய்தாலும், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தாலும் நிரந்தர தீர்வு காணாமல் மீண்டும் விற்பனை தொடர்வதும் தொடர்கதையாக உள்ளது. இதனால், மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

எனவே, வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரும் மொத்த வியாபாரிகள் மற்றும் அவர்களின் பின்னணியில் உள்ள நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். இதற்காக ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக கஞ்சா விற்பனை செய்த மொத்த வியாபாரியை கண்டுபிடித்து கைது செய்வதோடு, தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story