சிங்கப்பூரில் இருந்து திரும்பிய மன்னார்குடி வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு? மருத்துவமனையில் அனுமதி


சிங்கப்பூரில் இருந்து திரும்பிய மன்னார்குடி வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு? மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 19 Feb 2020 5:00 AM IST (Updated: 19 Feb 2020 12:00 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய மன்னார்குடி வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகத்துடன் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மனைவியின் பிரசவத்திற்காக அவர் தாயகம் திரும்பினார். அவருக்கு தொண்டை வலி, காய்ச்சல் இருந்து வந்தது. எனவே அவர் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர் கண்காணிக்கப்பட்டார்.

பாதிப்பு இல்லை

தற்போது அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதுமில்லை எனவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்..

இது குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் கூறுகையில், சிங்கப்பூரில் இருந்து வந்த வாலிபர் தனி வார்டில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் போன்ற பரவும் தன்மையுடைய தொற்று காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான அளவு முகவுரை கையிருப்பில் உள்ளது. மேலும் தஞ்சையை பொறுத்தவரை யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை’’ என்றார்.

Next Story