குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி., என்.பி.ஆர். குறித்து எழுதப்பட்ட காகித பண்டல்களை சவப்பெட்டியில் எடுத்துச்சென்று குழிதோண்டி புதைப்பு


குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி., என்.பி.ஆர். குறித்து எழுதப்பட்ட காகித பண்டல்களை சவப்பெட்டியில் எடுத்துச்சென்று குழிதோண்டி புதைப்பு
x
தினத்தந்தி 3 March 2020 11:30 PM GMT (Updated: 3 March 2020 8:36 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திருச்சியில் முஸ்லிம்கள் நேற்று 16-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி., என்.பி.ஆர். குறித்து எழுதப்பட்ட காகித பண்டல்களை சவப்பெட்டியில் எடுத்துச்சென்று குழிதோண்டி புதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

மத்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இந்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி, திருச்சி உழவர் சந்தை திடலில் நேற்று 16-வது நாளாக முஸ்லிம் அமைப்பினர் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

பாடை கட்டி குழிதோண்டி புதைப்பு

நேற்றைய போராட்டத்தின் போது, குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். குறித்து எழுதப்பட்ட காகிதங்களை பண்டல் பண்டலாக சவப்பெட்டியில் போட்டு ஊர்வலமாக எடுத்து வந்தனர். சவப்பெட்டியை தூக்கி வந்தவர்களில் ஒருவர் சட்டமேதை அம்பேக்தர் முகமூடி அணிந்திருந்தார்.

பின்னர் உழவர்சந்தை திடலின் ஒரு பகுதியில் தோண்டப்பட்ட குழியில் பண்டல்களை போட்டனர். அப்பண்டல்களை செருப்பால் அடித்து கோஷம் எழுப்பினர். பின்னர் அவை, அக்குழியில் புதைக்கப்பட்டன. இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் திருச்சிக்கு வந்த மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, உழவர் சந்தை திடலுக்கு வந்து, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

Next Story