கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: களையிழந்த கம்பம் வாரச்சந்தை


கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: களையிழந்த கம்பம் வாரச்சந்தை
x
தினத்தந்தி 18 March 2020 5:00 AM IST (Updated: 18 March 2020 2:00 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக கம்பம் வாரச்சந்தையில் வியாபாரம் களையிழந்தது.

கம்பம்,

தமிழக-கேரள எல்லையில் கம்பம் அமைந்துள்ளது. இங்கு விவசாயத்துக்கு அடுத்தபடியாக ரெடிமேடு ஆடை உற்பத்தி நடைபெறுகிறது. மாட்டு வியாபாரமும் களை கட்டி வருகிறது. இதனால் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கம்பத்துக்கு வருகின்றனர்.

இதேபோல் கேரள மாநிலம் குமுளி, கட்டப்பனை, நெடுங்கண்டம், வண்டிப்பெரியார் மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கம்பத்துக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். குறிப்பாக செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறும் வாரச்சந்தையில் பலசரக்கு பொருட்கள், காய்கறி, கருவாடு, தேங்காய், பழம், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

இதனால் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக நேற்று வாரச்சந்தை வியாபாரம் இல்லாமல் களை இழந்து காணப்பட்டது. இதற்கு, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலே காரணம் ஆகும். கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக அங்குள்ள வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை.

வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

இதேபோல் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களும் பொருட்கள் வாங்க வராமல் வீடுகளிலேயே முடங்கினர். கம்பம் வாரச்சந்தையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் வியாபாரம் நடைபெறும். ஆனால் நேற்று வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவர் கூறுகையில், கம்பத்தில் நடைபெறும் வாரச்சந்தையில் கேரள மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மொத்தமாக காய்கறிகளை வாங்கி செல்வார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக அங்கிருந்து யாரும் வரவில்லை. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பில் வியாபாரம் நடைபெறவில்லை. நாங்கள் வாங்கிய காய்கறிகளுக்கு பணத்தை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம் என்றார்.

Next Story