பட்டாசு நெருப்பு விழுந்து எண்ணூர் சுனாமி குடியிருப்பில் தீ விபத்து


பட்டாசு நெருப்பு விழுந்து எண்ணூர் சுனாமி குடியிருப்பில் தீ விபத்து
x
தினத்தந்தி 6 April 2020 10:30 PM GMT (Updated: 6 April 2020 10:26 PM GMT)

பட்டாசு நெருப்பு விழுந்து எண்ணூர் சுனாமி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

திருவொற்றியூர், 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா என்னும் இருளை விரட்டுவதற்கு இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின்விளக்குகளை அணைத்துவிட்டு அனைவரும் 9 நிமிடங்கள் வரை மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அடித்து ஒற்றுமையை வெளிப்படுத்தும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு எண்ணூர் பகுதியில் உள்ள வீடுகளில் விளக்குகளை அணைத்து விட்டு அகல்விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றினர். சிலர் செல்போன் மூலம் டார்ச் லைட் அடித்தும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். அப்போது சிலர் வானில் சென்று வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்க செய்தனர். அந்த பட்டாசு தீப்பொறி எதிர்பாராதவிதமாக எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு அருகே உள்ள காலி இடத்தில் விழுந்ததால் அங்கிந்த காய்ந்த புற்கள், மரங்களில் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.

அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டதால் அருகில் உள்ள சுனாமி குடியிருப்பில் வசித்த சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த எண்ணூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அந்த பகுதியில் உள்ள குடிசைகள் மீது தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் ஏற்படவில்லை.

இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story