கொரோனாவால் பாதிப்பு: சேலத்தில் கர்ப்பிணி பணியாற்றிய வங்கிக்கு ‘சீல்’


கொரோனாவால் பாதிப்பு: சேலத்தில் கர்ப்பிணி பணியாற்றிய வங்கிக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 30 April 2020 10:30 PM GMT (Updated: 2020-05-01T02:42:03+05:30)

சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பணியாற்றிய வங்கிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சூரமங்கலம்,

சேலம் சூரமங்கலம் புதுரோடு அருகே உள்ள ரெயில் நகரில் கேரளாவை சேர்ந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கணவர் ஆத்தூரில் ஒரு வங்கியில் உதவி மேலாளராகவும், மனைவி சூரமங்கலம் பகுதியில் ஒரு வங்கியில் கிளார்க்காகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கர்ப்பிணியான அந்த பெண் சமீபத்தில் கேரளாவுக்கு சென்றார். அப்போது அந்த பெண்ணுக்கு பாலக்காட்டில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனிடையே சேலம் வந்த ஆத்தூர் வங்கி அதிகாரிக்கும் கொரோனா தொற்று இருக்குமோ? என்ற சந்தேகத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கேரள தம்பதியினர் வசித்து வந்த சேலம் சூரமங்கலம் ரெயில் நகர் பகுதிக்கு சென்றனர். பின்னர் ரெயில் நகரை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்தனர். மேலும் அந்த பகுதிக்குள் வெளியாட்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கர்ப்பிணி பணியாற்றி வந்த வங்கிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் வங்கிக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் உள்பட 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணியின் கணவருக்கும் ரத்தம், சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே வங்கி அதிகாரி பணியாற்றி வந்த ஆத்தூர் வங்கியும் ‘சீல்’ வைக்கப்பட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story