டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்: குடையுடன் வரிசையில் நின்று மதுபானம் வாங்கினர்
புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. குடையுடன் வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்கினர்.
புதுக்கோட்டை,
டாஸ்மாக் கடைகளை ஊரடங்கு முடியும் வரை மூட உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 143 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் கடந்த 7-ந் தேதி புதுக்கோட்டை டவுன் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் கிராமப்புற பகுதிகளில் உள்ள கடைகளுக்கு டவுன் பகுதியில் இருந்து மதுப்பிரியர்கள் சென்றனர். இந்த நிலையில் தற்போது டவுன் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டதால் அங்கு மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க மதுப்பிரியர்கள் நேற்று காலையிலேயே கடைகளின் முன்பு திரண்டனர். மதுபிரியர்கள் வரிசையில் வந்து மதுபாட்டில்களை வாங்கி செல்லும் வகையில் கடையின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற தடுப்புக்குள் இடைவெளி விட்டு கம்புகள் கட்டப்பட்டிருந்தன. மேலும் தடுப்புகளை தாண்டி வட்டம் வரையப்பட்டிருந்தன. டோக்கன் முறைப்படி மதுபானம் விற்கப்பட்டன. காலை 9 மணி அளவில் டாஸ்மாக் கடை ஊழியர்கள், டோக்கன்களை வினியோகித்தனர். அந்த டோக்கன்களை வாங்க கடும் போட்டி நிலவியது. அவர்களது கைகளில் இருந்து டோக்கன்களை பறித்து செல்லக்கூடிய வகையில் மதுப்பிரியர்கள் சிலர் செயல்பட்டனர்.
டோக்கன் வாங்க கும்பல் திரண்டதால் பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்த போலீசார், மதுப்பிரியர்களை விரட்டினர். காலை 10 மணிக்கு கடை திறக்கப்படுவதற்கு முன்பே சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் கையில் குடையுடன் நின்றனர். முக கவசமும் அணிந்திருந்தனர். சிலர் குடை இல்லாமல் வந்திருந்தனர். அவர்கள் மதுபானம் வாங்கி விட்டு வந்தவர்களிடம் குடையை வாங்கி மதுபாட்டில்கள் வாங்க சென்றதை காணமுடிந்தது. சிலர் குடை இல்லாமலே மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.
டாஸ்மாக் கடைகள் முன்பு கைகளை கழுவ கிருமி நாசினி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் ஒரு சிலர் மட்டும் கைகளை கழுவினர். டாஸ்மாக் கடை முன்பு கூட்டத்தை போலீசார் மற்றும் கடை ஊழியர்கள் கட்டுப்படுத்தினர்.
டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாவட்டத்தில் உள்ள 143 கடைகளில் 142 கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. பொதுமக்கள் எதிர்ப்பு தொடர்பான பிரச்சினையால் கொடும்பாளூர் அருகே தேங்காய்சீனிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு தலா 70 டோக்கன்கள் வீதம் 7 மணி நேரத்திற்கு வினியோகிக்கப்படுகிறது. தேவையான அளவிற்கு டோக்கன்கள் தயார் நிலையில் உள்ளன” என்றார். டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் அனுமதிக்கப்பட்ட அளவிலான மதுப்பாட்டில்களை மொத்தமாக வாங்கிச்சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், அரிமளம், கே.புதுப்பட்டி உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் முக கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியுடன் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story