கொரோனா ஊரடங்கு 55-வது நாளை எட்டியது; அத்தியாவசிய பொருட்கள்கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் திண்டாட்டம்


கொரோனா ஊரடங்கு 55-வது நாளை எட்டியது; அத்தியாவசிய பொருட்கள்கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் திண்டாட்டம்
x
தினத்தந்தி 17 May 2020 11:15 PM GMT (Updated: 17 May 2020 8:34 PM GMT)

கொரோனா ஊரடங்கு 55-வது நாளை எட்டி உள்ள நிலையில் வருமானமின்றி தவிக்கும் பொதுமக்கள், அத்தியாவசிய பொருட்கள்கூட வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். எனவே, அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை, 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) 55-வது நாளை எட்டிய ஊரடங்கால் அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மக்களின் சிரமத்தை போக்கும் வகையில், படிப்படியாக ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது தொழில் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஓட்டல்கள், டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்காமல், பார்சல் வாங்கி செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மேலும் ஆட்டோ, கார், வேன்கள் இயக்க அனுமதிக்கப்படாததால், அனைத்து டிரைவர்களும் வேலைவாய்ப்பின்றி வறுமையில் வாடுகின்றனர்.

இதுபோன்று பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றிய பெரும்பாலான தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு இழந்ததால், வருமானமின்றி தவிக்கின்றனர். இதனால் அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினரும் எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வாழும் நிலை உருவாகி உள்ளது.

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கால் பாமர மக்களிடம் பணப்புழக்கம் அறவே இல்லை. எனவே, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் திண்டாடுகின்றனர். இதனால் கடைகளிலும் போதிய வியாபாரம் இல்லாததால், வியாபாரிகளும் வருமானமின்றி வாடுகின்றனர்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், கடந்த மாதம் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.1,000 மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மே, ஜூன் மாதங்களுக்கும் இலவச ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் துவரம் பருப்பு, உளுந்து, கடலை பருப்பு உள்ளிட்ட 19 வகையான மளிகை பொருட்களை மலிவு விலையில் ரூ.500-க்கு ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு செய்தது. எனினும் ஊரடங்கால் வேலைவாய்ப்பின்றி வறுமையில் வாடும் ஏழை மக்களால், மலிவு விலை உணவுப்பொருட்களையும் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான கிராமங்களிலும் ரேஷன் கடைகளில் மலிவு விலை உணவுப்பொருட்கள் விற்பனை ஆகவில்லை.

பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், நெல்லை மாநகரில் புதிய பஸ் நிலையம், டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 14 இடங்களில் காய்கறி மார்க்கெட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்றே மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்படுகின்றன.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வெளியில் சென்று வருகின்றனர். ஆனாலும், வருமானம் இழந்த ஏழை மக்களிடம், பொருட்களை வாங்கும் சக்தி வெகுவாக குறைந்து விட்டது. இதனால் காலை முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கடைகளில் ஓரளவுக்கு விற்பனை நடைபெறுகிறது. பின்னர் மதியம் முதல் மாலை வரையிலும் சில நபர்களே வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் மார்க்கெட்டுகளில் விற்பனையாகாத காய்கறிகள் அழுகி வீணாகி, கால்நடைகளுக்கு தீவனமாகின்றன.

ஊரகப்பகுதிகளில் நடைபெறும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பெரும்பாலும் வயதானவர்களே பயன்பெற்று வந்தனர். ஆனால், தற்போது கொரோனா பீதியால் 55 வயதுக்கு அதிகமானவர்களுக்கு இந்த திட்டத்தில் வேலை வழங்கப்படுவது இல்லை. இதனால் பெரும்பாலான கிராமமக்களும் எவ்வித வருமானமும் இல்லாமல் தவிக்கின்றனர்.

இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மாநகர தலைவர் குணசேகரன் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையே ஊரடங்கை சற்று தளர்வு செய்தவுடன், சில நாட்களாக அனைத்து கடைகளிலும் ஓரளவு வியாபாரம் நடைபெற்றது. பின்னர் மக்களிடம் பணப்புழக்கம் இல்லாததால், கடைகளில் படிப்படியாக விற்பனை குறைந்து வருகிறது. இதனால் அனைத்து கடைகளும் பகலில் திறந்து இருந்தாலும் வெறிச்சோடி காணப்படுகிறது.

பஸ் போக்குவரத்து இயக்கப்படாததால், வெளியூர்களில் உள்ள பொதுமக்கள் நெல்லைக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்ல முடியாத நிலை உள்ளது. வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து போதிய சரக்கு வாகனங்கள் இயக்கப்படாததால், சரக்குகள் வரத்தும் குறைந்துள்ளது.

எனவே, மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச நிவாரண நிதி வழங்கவும், வணிகர்களுக்கு எவ்வித பிணையுமின்றி கடன் உதவி வழங்கவும் அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story