திருப்பூரில் இருந்து பீகார், ஜார்கண்டிற்கு 3 ஆயிரத்து 64 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் பயணம்
திருப்பூரில் இருந்து பீகார், ஜார்கண்டிற்கு சிறப்பு ரெயிலில் நேற்று 3 ஆயிரத்து 64 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
திருப்பூர்,
திருப்பூரில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 6 லட்சம்.
வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் 2 லட்சம். கொரோனாவினால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக தமிழக தொழிலாளர்கள்
சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ரெயில் வசதி இல்லாததால் ஊருக்கு செல்ல முடியாமல் திருப்பூரிலேயே இருந்தனர்.
இதற்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன்படி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறையினரிடம் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் வடமாநில
தொழிலாளர்கள் செல்போன் எண், ஆதார் எண் போன்றவற்றை கொடுத்து பதிவு செய்தனர்.
அதன்படி திருப்பூரில் சிறப்பு ரெயில்களில் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறார்கள்.
3 ஆயிரத்து 64 பேர் உற்சாகமாக...
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து பீகார் மாநிலம் சிட்மர்ஹி வரை செல்லும் சிறப்பு
ரெயில் புறப்பட்டது. இதில் 1464 தொழிலாளர்கள் பயணம் செய்தனர். இதன் பின்னர் மாலை 5.30 மணிக்கு திருப்பூரில் இருந்து
ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியா வரை மற்றொரு சிறப்பு ரெயில் சென்றது. இதில் மற்ற ரெயில்களை விட கூடுதலாக ஒரு ரெயில்
பெட்டி இணைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இதில் 1600 பேர் பயணம் செய்தனர். மொத்தமாக 2 சிறப்பு ரெயில்களிலும் சேர்த்து 3
ஆயிரத்து 64 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
முன்னதாக இந்த தொழிலாளர்கள் அனைவரும் காலையில் இருந்தே பல்வேறு பகுதிகளில் இருந்து ரெயில் நிலையத்திற்கு பஸ்,
வேன் உள்ளிட்ட வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர். இந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து,
ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
இதுபோல் உணவு, தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்டு தொழிலாளர்கள் உற்சாகமாக தங்களது சொந்த
ஊர்களுக்கு சென்றனர்.
Related Tags :
Next Story