அதிகாரிக்கு கொரோனா தொற்று: தஞ்சை தலைமை தபால் நிலையம் மூடல் ஊழியர்கள் 135 பேருக்கும் பரிசோதனை


அதிகாரிக்கு கொரோனா தொற்று: தஞ்சை தலைமை தபால் நிலையம் மூடல் ஊழியர்கள் 135 பேருக்கும் பரிசோதனை
x
தினத்தந்தி 15 Sep 2020 12:54 AM GMT (Updated: 15 Sep 2020 12:54 AM GMT)

அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தஞ்சை தலைமை தபால் நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள், தபால்காரர்கள் உள்பட 135 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,


தஞ்சை ரெயில் நிலையம் அருகே தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து பணப்பரிவர்த்தனை மற்றும் பதிவு தபால்கள் அனுப்புவது போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு வரும் வாடிக்கையாளர்களின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு டோக்கனும் வழங்கப்பட்டு அதன்படி அவர்கள் பணபரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரிக்கு கொரோனா

இந்த நிலையில் இங்கு பணியாற்றி வரும் அதிகாரி ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமை தபால் நிலையம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் தலைமை தபால் நிலையமும் மூடப்பட்டது.

இதனால் நேற்று இங்கு வந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். மேலும் இங்கு பணியாற்றி வரும் அதிகாரிகள், ஊழியர்கள், தபால்காரர்கள் என 135 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இன்று வரை மூடல்

இன்றும்(செவ்வாய்க்கிழமை) வரை தலைமை தபால் நிலையம் மூடப்பட்டு இருக்கும். நாளை (புதன்கிழமை) முதல் செயல்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story