மணப்பாறை, துறையூர், தொட்டியத்தில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி


மணப்பாறை, துறையூர், தொட்டியத்தில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 16 Sep 2020 1:23 AM GMT (Updated: 16 Sep 2020 1:23 AM GMT)

மணப்பாறை, துறையூர், தொட்டியத்தில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

மணப்பாறை,

பருவமழை தொடங்க உள்ள நிலையில் பருவமழைக்காலங்களில் மக்கள் எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி மணப்பாறையில் உள்ள வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து பாதுகாப்பு பொருட்களையும் பொதுமக்களுக்காக காட்சி வைத்திருந்ததோடு அதன் பயன்பாடுகளையும் செயல்முறை படுத்தக்காட்டினர். இந்த நிகழ்வில் மணப்பாறை தாசில்தார் லெஜபதிராஜ் மற்றும் வருவாய்துறையினர் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

துறையூர்

இதுபோல், துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, துறையூர் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் அறிவழகன் முன்னிலையில் தீயணைப்புத் துறை வீரர்கள் பேரிடர் காலமீட்பு பணிகளில், தக்க உபகரணங்களோடு எவ்வாறு ஈடுபடுவது என செயல்முறை பயிற்சி விளக்கம் அளித்தனர். முன்னதாக வட்டாட்சியர் அகிலா தலைமையில் பேரிடர் கால முதல் நிலை மீட்பு அலுவலர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

தொட்டியம்

தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வடகிழக்கு பருவமழையின்போது பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொட்டியம் தாசில்தார் மலர் தலைமை வகித்தார். தலைமையிடத்து துணை தாசில்தார் தங்கவேல் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலைய அலுவலர் முனியாண்டி மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் கலந்து கொண்டு மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

Next Story