திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் மறியல் போராட்டம்


திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 16 Sep 2020 1:50 AM GMT (Updated: 16 Sep 2020 1:50 AM GMT)

திருவையாறு அருகே விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவையாறு,

தஞ்சை மாநகரம் பொலிவுறு நகரமாக (ஸ்மார்ட் சிட்டி) அறிவிக்கப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாநகரில் குடிநீர் திட்டத்திற்காக திருவையாறு அருகே உள்ள விளாங்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அங்கிருந்து குடிநீர் எடுக்க உள்ளனர்.

இதற்காக நேற்று காலையில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கியது. அதனை பார்த்த கிராம மக்கள் போராட்டக்குழு தலைவர் கலையரசி தலைமையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆழ்குழாய் கிணறு அமைக்கும் எந்திரத்திற்கான தேவையான பொருட்களை கொள்ளிட கரைக்கு எடுத்து வந்தனர்

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல், தாசில்தார் நெடுஞ்செழியன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது தொடர்பாக திருவையாறு தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் கருத்து கேட்டு அதன்பின்னர் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படும் என்று கூறியதின் பேரில் கிராம மக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விவசாய நிலங்கள் பாதிக்கும்

இது தொடர்பாக கலையரசி கூறியதாவது:-

எங்கள் பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாகும். விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிலும் எங்களுக்கு தெரி யாது. இங்கு விவசாயம் பாதிக்கும் வகையில் இரண்டு ஆண்டுக்கு முன்பு மணல் குவாரி அமைக்க அரசு முயன்றபோது அதை நாங்கள் தடுத்து நிறுத்தியதுடன், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கும் போட்டுள்ளோம்.

இந்த நிலையில் தஞ்சை மாநகரில் குடிநீர் திட்டத்திற்காக குடிதண்ணீர் எடுக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் எங்கள் ஊர் மற்றும் பக்கத்தில் உள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மேலும் நிலத்தடி நீர் கீழே இறங்கி விடுவதால் குடிநீரும் இல்லாமல் எங்கள் ஊர் பாதிக்கும். ஆகவே ஆழ்குழாய் கிணறு அமைப்பதை அரசு நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிலத்தடி நீர் கீழே சென்று விடும்

விவசாயி தாமோதரன் கூறியதாவது:-

விளாங்குடி, புனவாசல், அனைக்குடி, செம்மங்குடி உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 400 ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகிறோம். ஏற்கனவே கொள்ளிடம் ஆற்றில் பத்து இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து வேதாரண்யம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் தஞ்சை பொலிவுறு நகரம் திட்டத்தில் மாநகரின் குடிநீருக்காக கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்க முயற்சிக்கின்றனர். 24 மணி நேரமும் தண்ணீர் செல்வதால் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்று விடும். விவசாயம் செய்கின்ற ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வராது. இதனால் விவசாயம் பாதிக்கும். எங்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கும். ஆகவே தமிழக அரசு கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story