ஆண்டிப்பட்டியில் சமூக விரோதிகள் கூடாரமாக மாறும் நெசவு பூங்கா


ஆண்டிப்பட்டியில் சமூக விரோதிகள் கூடாரமாக மாறும் நெசவு பூங்கா
x
தினத்தந்தி 16 Sep 2020 3:29 AM GMT (Updated: 16 Sep 2020 3:29 AM GMT)

ஆண்டிப்பட்டியில் சமூக விரோதிகள் கூடாரமாக மாறிவரும் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். இங்கு சேலை, வேட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கிடையே இப்பகுதிகளில் வசிக்கும் நெசவாளர்கள் நலனுக்காக மத்திய-மாநில மற்றும் நெசவாளர்களின் பங்களிப்புடன் ஆண்டிப்பட்டியில் வைகை உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு விசைத்தறி கூடங்கள் கட்டப்பட்டன. ஆனால் அரசு மற்றும் நெசவாளர்களின் நிதி உரிய நேரத்தில் வழங்கப்படாததால் இந்த திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனால் நெசவு பூங்காவில் பிரமாண்ட விசைத்தறி கூடங் கள் கட்டப்பட்டும், அவை பயன்பாடின்றி கிடக்கின்றன. பல ஆண்டுகளாக பயன்படாமல் இருக்கும் நெசவு பூங்காவின் கட்டிடங்கள் தற்போது சேதமடைந்து வருகின்றன. ஜன்னல்கள் மற்றும் மேற்கூரைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. எனவே நெசவு பூங்கா திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் நெசவாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சமூக விரோதிகள்

இந்தநிலையில் நெசவு பூங்காவிற்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் தற்போது சமூக விராதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. கட்டிடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலி மதுபாட்டில்கள் ஏராளமாக குவிந்து கிடக்கிறது. உரிய பாதுகாப்பின்றி திறந்தே காணப்படும் இந்த கட்டிடங்களில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே நெசவாளர்களின் கனவு திட்டமான உயர் தொழில்நுட்ப விசைத்தறி பூங்காவிற்காக கட்டப்பட்ட கட்டிடங்களில் நடைபெறும் சமூக விரோத செயல்களை ஒடுக்கி, நெசவு பூங்கா திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story