நடிகை கங்கனாவுடன் ஜெயாபச்சன் மோதல் எதிரொலி அமிதாப் பச்சன் பங்களாக்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு


நடிகை கங்கனாவுடன் ஜெயாபச்சன் மோதல் எதிரொலி அமிதாப் பச்சன் பங்களாக்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 16 Sep 2020 11:16 PM GMT (Updated: 16 Sep 2020 11:16 PM GMT)

நடிகை கங்கனாவுக்கு எதிராக மாநிலங்களவையில் ஜெயாபச்சன் பேசியதை அடுத்து மும்பையில் உள்ள அமிதாப் பச்சன் பங்களாக்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மும்பை,

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்த நிகழ்வுகள் இந்தி திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தி திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக நடிகை கங்கனா ரணாவத் குற்றம்சாட்டினார். மும்பை நகரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போன்று உணருவதாக கூறிய அவர், மும்பை போலீசாரையும் கடுமையாக விமர்சித்தார்.

இதையடுத்து அவருக்கும், ஆளும் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கங்கனா ரணாவத்தின் பங்களாவின் ஒரு பகுதி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டவை எனக்கூறி அதை மும்பை மாநகராட்சி இடித்து தள்ளியது.

இதற்கு மத்தியில் கங்கனா ராணவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமிதாப் பச்சனின் மனைவியும், சமாஜ்வாடி கட்சியின் எம்.பி.யுமான நடிகை ஜெயாபச்சன் மாநிலங்களைவில் பேசினார். போதைப்பழக்கம் என்று கூறி இந்தி திரையுலகின் நற்பெயரை கெடுக்க சிலர் சதி செய்வதாக அவர் குற்றம்சாட்டினார். ஜெயா பச்சனின் இருந்த பேச்சுக்கு சிவசேனா ஆதரவு அளித்து உள்ளது.

ஆனால் நடிகை கங்கனா ரணாவத் கடுமையான வார்த்தைகளால் ஜெயாபச்சனுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

இதற்கிடையே மும்பை ஜூகுவில் உள்ள நடிகர் அமிதாப் பச்சனின் பங்களாக்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அமிதாப் பச்சனுக்கு ஜூகுவில் ஜல்ஷா, ஜானக், பிரதிக்‌ஷா என்ற பெயரில் பங்களாக்கள் உள்ளன. இதில் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் ஜல்ஷா, பிரதிக்‌ஷா பங்களாக்களில் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அந்த பங்களாக்களுக்கு வெளியே நேற்று போலீசார் குவிக்கப்பட்டனர். மாநிலங்களவையில் ஜெயாபச்சனின் பேச்சை அடுத்து அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து விடாத வண்ணம் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story
  • chat