பிரான்ஸ் நாட்டில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.4 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்


பிரான்ஸ் நாட்டில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.4 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Sep 2020 2:32 AM GMT (Updated: 23 Sep 2020 2:32 AM GMT)

பிரான்ஸ் நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு தபால் சரக்கக பிரிவுக்கு விமானத்தில் வரும் பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து சென்னையில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது.

அந்த பார்சலில் கொரோனா மருந்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. இந்த பார்சலை கண்ட சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகம் அடைந்து அவற்றை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் போதை மாத்திரைகள் கடத்தப்பட்டு வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ரூ.4 லட்சம் போதை மாத்திரைகள்

அதிலிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட விலையுர்ந்த 130 போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்தனர். இந்த நிலையில் அதில் குறிப்பிடப்பட்டிருந்த சென்னையில் உள்ள முகவரிக்கு சென்று விசாரித்தபோது அது கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக பூட்டியே கிடப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரும் போதை பொருட்களை கல்லூரி மாணவர்கள், வசதி படைத்த இளைஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story