மைசூரு தசரா விழா: ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 300 பேர் பங்கேற்க அனுமதி மந்திரி எஸ்.டி.சோமசேகர் பேட்டி


மைசூரு தசரா விழா: ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 300 பேர் பங்கேற்க அனுமதி மந்திரி எஸ்.டி.சோமசேகர் பேட்டி
x
தினத்தந்தி 12 Oct 2020 10:03 PM GMT (Updated: 12 Oct 2020 10:03 PM GMT)

மைசூரு தசரா விழாவையொட்டி நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 300 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று மந்திரி எஸ்.டி.சோமசேகர் கூறியுள்ளார்.

பெங்களூரு,

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரிகள் அஸ்வத்நாராயண், கோவிந்த் கார்ஜோள் உள்ளிட்டோருக்கு மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் தலைமையிலான தசரா குழுவினர் நேற்று நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து, தசரா விழாவில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தனர்.

அதன் பிறகு எஸ்.டி.சோமசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உயர்மட்ட குழு கூட்டத்தில் மைசூரு தசரா விழாவை தொடங்கி வைக்க கொரோனா முன்கள பணியாளர்கள் 6 பேரை தேர்ந்தெடுத்து வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு ஒருவரை வைத்து தசரா விழாவை தொடங்கி வைக்கலாம் என்றும் 5 பேரை விழாவில் கவுரவிக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஜம்பு சவாரி

தசரா விழாவை தொடங்கி வைக்க டாக்டர் மஞ்சுநாத் பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி என்னிடம் கூறினார். அதை நான் மைசூருவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தேன். இன்று (அதாவது நேற்று) அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளேன். இந்த முறை கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த விழாவை எளிமையாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.

சாமுண்டி மலையில் நடைபெறும் தசரா தொடக்க விழாவில் 200 பேரும், அரண்மனையில் நடைபெறும் கலாசார நிகழ்ச்சிகளில் 50 பேரும், ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 300 பேரும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், ஊடகத்தினரில் எத்தனை பேருக்கு அனுமதி வழங்கப்படும் என்பதை மாவட்ட கலெக்டர் முடிவு செய்வார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு மந்திரி எஸ்.டி.சோமசேகர் கூறினார்.

Next Story