தாசில்தார் மேற்பார்வையில் அமுதசுரபி பெட்ரோல் பங்குகள் இயக்கம் கலெக்டர் அருண் உத்தரவு


தாசில்தார் மேற்பார்வையில் அமுதசுரபி பெட்ரோல் பங்குகள் இயக்கம் கலெக்டர் அருண் உத்தரவு
x
தினத்தந்தி 13 Oct 2020 4:01 AM IST (Updated: 13 Oct 2020 4:01 AM IST)
t-max-icont-min-icon

தாசில்தாரின் மேற்பார்வையில் அமுதசுரபி பெட்ரோல் பங்குகள் இயங்க கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு அனைத்து தொடர்புடைய துறைகளையும் ஒன்றிணைத்து தொற்றினால் பாதிக்கப்பட்ட இடங்களில் கட்டுப்பாடுகளை விதித்தல், ஊரடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அரசு வாகனங்களுக்கான ஒரே பெரிய வினியோக அமைப்பாக புதுவை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் (அமுதசுரபி பிரிவு) பெட்ரோலியம், ஆயில் மற்றும் மசகு எண்ணெய் முறையாக வழங்கப்படாததால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக உள்ளது. அரசு வாகனங்களுக்கான பெட்ரோலியம், ஆயில் மற்றும் மசகு எண்ணெய் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்கீழ் உள்ள விதிகளின்படி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மேலாண் இயக்குனருக்கு குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வழங்க இந்த மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தியது.

தாசில்தார்

ஆனால் இந்த வழிகாட்டுதல்கள் அந்நிறுவனத்தால் பின்பற்றப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இது பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள அரசினுடைய செயல்பாட்டினை நேரடியாக பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்துறை நடுவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் லாஸ்பேட்டை கொட்டுப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள புதுச்சேரி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் (அமுதசுரபி பிரிவு) பெட்ரோலியம், ஆயில் மற்றும் மசகு எண்ணெய் சில்லரை விற்பனை நிலையமானது இனிமேல் நிகழ்விட தலைமையர் மற்றும் உழவர்கரை தாசில்தாருடன் பின்வரும் நிபந்தனைகளுடன் உடனடியாக இணைக்கப்படுகிறது.

சில்லரை விற்பனை நிலையமானது புதுச்சேரி கூட்டுறவு கட்டிட மைய மேலாண் இயக்குனரின் கட்டுப்பாட்டில் இயக்கப்படும் மற்றும் அரசு வாகனங்களுக்கு போதுமான இருப்பையும், பெட்ரோலியம், ஆயில் மற்றும் மசகு எண்ணெய் தடையின்றி வழங்குவதையும் அவர் உறுதி செய்வார்.

மேற்பார்வை

பெட்ரோலியம், ஆயில், மசகு எண்ணெயின் இருப்பு மற்றும் விற்பனை கணக்குகள் புதுவை கூட்டுறவு கட்டிட மையத்தின் மேலாண் இயக்குனரால் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். சில்லரை விற்பனை நிலையத்தின் செயல்பாடுகளை நிகழ்விட தலைமையர் மற்றும் தாசில்தார் மேற்பார்வையிடுவார்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story