தஞ்சை-மயிலாடுதுறை இடையே 68 கி.மீ. தூரத்திற்கு ரெயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் தீவிரம்


தஞ்சை-மயிலாடுதுறை இடையே 68 கி.மீ. தூரத்திற்கு ரெயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 13 Oct 2020 12:27 AM GMT (Updated: 13 Oct 2020 12:27 AM GMT)

தஞ்சை-மயிலாடுதுறை இடையே 68 கி.மீ. தூரத்திற்கு ரெயில் பாதை மின்மயமாக்கும் பணிகளை இந்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு அதற்கேற்ப பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தஞ்சாவூர்,

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களுள் ஒன்று தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் வழியான ரெயில் பாதை. இது ‘மெயின் லைன்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் தஞ்சை வழியான ரெயில்பாதையே மிகவும் பழமை வாய்ந்த ரெயில் பாதை ஆகும். ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரெயில் பாதை அமைக்கப்பட்டது.

இந்த வழித்தடத்தில் தஞ்சையில் இருந்து கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் வரையிலான மின்சார ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. கடலூர்-விழுப்புரம் இடையே பணிகள் முடிவடைந்து விட்டது. தஞ்சையில் இருந்து கடலூர் வரையிலான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை ரெயில்வே துறையில் உள்ள ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

228 கி.மீ. தூரம்

ஒற்றை ரெயில் பாதையான இந்த வழித்தடத்தில் ரூ.300 கோடியில் 228 கி.மீ. தூரம் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக கடலூர் மற்றும் மயிலாடுதுறையில் துணை மின் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கடலூர் துணை மின் நிலையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு வழங்கி விட்டது. மயிலாடுதுறை துணை மின் நிலையத்திற்கு பணம் கட்டப்பட்டு விட்டது. இதற்கு அடுத்த ஆண்டு மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

முதல் கட்டமாக விழுப்புரம்-கடலூர் இடையே 29 கி.மீ. தூரம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முடிக்கப்பட்டன. 2-வது கட்டமாக கடலூரில் இருந்து மயிலாடுதுறை வரை 110 கி.மீ. தூரம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் முடிக்கப்பட்டன.

தஞ்சை-மயிலாடுதுறை

இறுதி கட்டமாக மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை வரையிலான 68 கி.மீ. தூரத்திற்கு மின்மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது வடமாநில தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மயிலாடுதுறையில் இருந்து தொடங்கிய பணிகள் தற்போது தஞ்சை பகுதிகளில் நடந்து வருகிறது. மின் கம்பங்கள் அமைப்பது, வயர் இணைப்பு கொடுப்பது போன்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த மாதத்துக்குள் முடியும்

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “இந்த வழித்தடத்தில் ஏற்கனவே விழுப்புரத்தில் இருந்து கடலூர் வரையிலும், கடலூரில் இருந்து மயிலாடுதுறை வரையிலும் மின்மயமாக்கல் பணியை பெங்களூருவில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து அனுமதியும் அளித்து விட்டார். தற்போது மயிலாடுதுறை-தஞ்சை இடையே பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த மாதத்துக்குள் பணிகளை முடித்து ஆவணங்கள் ரெயில்வே பாதுகாப்பு அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் ஆய்வு செய்து மின்சார ரெயில் என்ஜின் இயக்க அனுமதி அளிப்பார்” என்றனர். மின்சார ரெயில் இயக்குவதன் மூலம் மாசு குறைவதுடன், இழுவைத்திறனும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story