ஆஸ்திரேலியாவிற்கு மசாலா பாக்கெட்டுகளில் வைத்து கடத்த முயற்சி: சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் போதை பவுடர் சிக்கியது


ஆஸ்திரேலியாவிற்கு மசாலா பாக்கெட்டுகளில் வைத்து கடத்த முயற்சி: சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் போதை பவுடர் சிக்கியது
x
தினத்தந்தி 14 Oct 2020 4:58 AM IST (Updated: 14 Oct 2020 4:58 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியாவிற்கு மசாலா பவுடர் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து கடத்த முயன்ற ரூ.30 லட்சம் போதை பவுடர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்ககப்பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு அனுப்ப தயாராக இருந்த பார்சல்களில் பெரும் அளவு போதை மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் சரக்ககப்பிரிவுக்கு சென்று அங்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த பார்சல்களை தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது அதில், ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள அன்பர்ன் நியூ சவுத் வேல்ஸ் என்ற நகரின் முகவரிக்கு பிரபல நிறுவனத்தை சேர்ந்த சாம்பார், மிளகாய் உள்ளிட்ட மசாலா பவுடர்கள் இருப்பதாக பார்சல்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அவற்றை சந்தேகத்தின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் ஒவ்வொன்றாக பிரித்து பார்த்தனர். அதில் மசாலா பவுடர் பாக்கெட்டுகளுக்குள் வெள்ள நிற கிரிஸ்டல் பவுடர் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை வெளியே எடுத்து அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது, ‘சூடோபீட்ரின்’ என்ற போதை பவுடர் மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர்.

சுமார் 3 கிலோ எடை கொண்ட போதைப்பவுடரை பறிமுதல் செய்த அதிகாரிகள், கூரியர் அலுவலகத்தில் தேனி மாவட்டத்தில் இருந்து போதைப்பொருட்களை அனுப்பியதை கண்டறிந்தனர்.

4 பேர் கைது

இது தொடர்பாக தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னையை சேர்ந்த சாதிக் (37) என்பவர், கர்நாடகா மாநிலம் பெங்களூரூவில் இருந்து வாங்கி வந்த போதைப்பவுடரை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப முயன்றது தெரியவந்தது.

அங்கிருந்து நேரடியாக அனுப்பினால் சிக்கிவிடுவோம் என்று பயந்து, தன்னுடைய நண்பர்களான சென்னையை சேர்ந்த கான் (30), புதுக்கோட்டையை சேர்ந்த அந்தோணி (41) ஆகியோர் உதவியுடன் பிரபல நிறுவன மசாலா பாக்கெட்டுகளில் போதைப்பவுடரை மறைத்து வைத்து தேனியை சேர்ந்த செல்வம் என்பவர் மூலமாக கூரியரில் அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், சாதிக் அவனது கூட்டாளிகளான கான், அந்தோணி, செல்வம் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story