மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 13 Oct 2020 11:53 PM GMT (Updated: 13 Oct 2020 11:53 PM GMT)

குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். அப்போது இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்.

தென்காசி,

குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். அப்போது இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்து செல்வார்கள். அதன்பிறகு பருவமழை தொடங்கும். அப்போதும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழும்.

ஆனால், இந்த ஆண்டு சீசனில் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியபோதிலும், கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால் வெறிச்சோடி காணப்பட்டது. தற்போதும் குற்றாலத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், தென்காசி, குற்றாலம் பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே அந்த பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஐந்தருவியிலும் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

ஆனாலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் ஆட்கள் வரத்து இன்றி அருவிக்கரை வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு வரும் பொதுமக்கள் வெளியே நின்று அருவியை மட்டும் பார்த்து செல்கின்றனர்.

Next Story
  • chat