சேவூர் அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது; 19 பேர் காயம்
சேவூர் அருகே பனியன் நிறுவன வேன் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
சேவூர்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே எரங்காட்டூர் பகுதியில் இருந்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு 28 தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு பனியன் நிறுவன வேன் வந்து கொண்டிருந்தது. இந்த வேன் சேவூர் - அவினாசி சாலையில் கருமாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வேனின் பின்புறம் இடது பக்க டயர் வெடித்தது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நாகரத்தினம் (வயது 35), கவுசல்யா (20), பிரியா (18), தங்கமணி (29), பூபதி (30), மகேஸ்வரி (30), கவிநிலா (29), சக்தி (30), பூங்கொடி (34), மாலதி (30), சங்கீதா (22), சரஸ்வதி (50), மயிலாள் (42), பெரியநாயகி (20), மற்றொரு கவுசல்யா (26), மேனகா (27), பிரகாஷ் (25), ராமச்சந்திரன் (35) உள்பட 19 பேர் காயமடைந்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த சேவூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து பலத்த காயமடைந்து வேனிற்குள் இருந்த தொழிலாளர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் நாகரத்தினம், கவுசல்யா, பிரியா மற்றும் தங்கமணி ஆகியோர் மட்டும் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேகமாக செல்லும் வாகனங்கள்
அவினாசி - சேவூர் சாலையில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவன வாகனங்கள் தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு, ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பழுதான டயர்களை பொருத்தி அதிகப்படியான தொழிலாளர்களை ஏற்றி தொழிலாளர்களின் உயிர்களோடு விளையாடும் பனியன் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிக வேகத்துடன் செல்லும் பனியன் நிறுவன வாகனங்களுக்கு உரிய அபராதம் விதித்து உரிமங்களை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story