மோசடி பேர்வழிகளின் புது டிரெண்ட்: வாட்ஸ்-அப் அழைப்பில் இளம் பெண்ணை நிர்வாணமாக காட்டி பணம் பறிப்பு


மோசடி பேர்வழிகளின் புது டிரெண்ட்: வாட்ஸ்-அப் அழைப்பில் இளம் பெண்ணை நிர்வாணமாக காட்டி பணம் பறிப்பு
x
தினத்தந்தி 29 Oct 2020 2:28 AM GMT (Updated: 29 Oct 2020 2:28 AM GMT)

மோசடி பேர்வழிகள் புது டிரெண்டாக வாட்ஸ்-அப் அழைப்பில் இளம்பெண்ணை நிர்வாணமாக காட்டி பணம் பறித்து வருகிறார்கள். உஷாராக இருக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

திருச்சி, 

இன்றைக்கு அன்றாட வாழ்க்கையில் தொழில் நுட்பம் தேவையான ஒன்றாகி விட்டது. செல்போன்கள் இல்லாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வளர்ச்சி பெற்று விட்டது. ஸ்மார்ட் போன் இன்றி இருக்கக்கூடாது என்ற மனநிலை அனைவர் மனதிலும் ஏற்பட்டு விட்டது. அதுவும் நமது நிழல்போல கூடவே பயணிக்கிறது.

தொழில் நுட்ப வளர்ச்சி பன்மடங்கு வேகத்தில் வளர்ச்சி அடைந்தாலும் அது பல சாதகங்களையும், பாதகங்களையும் கொண்டதாகவே இருக்கிறது. ஆனால், இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புது டிரெண்டாக மோசடி கும்பல் பணம் பறிக்க நூதன வழிகளை கையாண்டு வருகிறது.

இளம்பெண்

அதாவது, பேஸ்புக் சென்று நமது செல்போன் எண்களை எடுத்து வாட்ஸ்-அப் அழைப்பில் ஒரு இளம்பெண்ணை முதலில் பேச செய்கிறார்கள். எதிர்முனையில் இருப்பவர் அந்த இளம்பெண்ணின் அழகை கண்டு ரசிக்க தொடங்கி விடுகிறார். பின்னர், அந்த இளம்பெண் நிர்வாணமாக போஸ் கொடுக்கிறார். பதிலுக்கு சம்பந்தப்பட்ட இளைஞரும் வாட்ஸ்-அப் அழைப்பில் ஏதாவது செய்து தனது உடல் அசைவுகளை காண்பித்துவிடுகிறார்.

இப்படி இளம்பெண்களை வைத்து ஆபாசமாக காட்டும் மோசடி பேர்வழிகள், அதை பதிவேற்றம் செய்து சம்பந்தப்பட்ட நபருக்கு பேசுகிறார்கள். அப்போது, நீங்கள் ஒரு இளம்பெண்ணுடன் வாட்ஸ்-அப் அழைப்பு மூலம் செய்த சேட்டைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவோம். அதை பதிவேற்றம் செய்யாமல் இருக்க வேண்டுமானால், ஒரு குறிப்பிட்ட தொகையை இணையவழி பணம் செலுத்தும் முறையிலோ அல்லது ஏதாவது ஒரு கணக்கு எண்ணிற்கு செலுத்த சொல்லி மிரட்டுகிறார்கள்.

பணம் கேட்டு மிரட்டல்

மேலும் அந்த இளைஞர், இளம் பெண்ணுடன் செய்யும் சேட்டைகளுடன் கூடிய வீடியோ பதிவை, வாட்ஸ்-அப்பில் அனுப்புகிறார்கள். சம்பந்தப்பட்ட இளைஞரோ எங்கே நமது மானம் போய்விடுமோ என பயந்து உடனடியாக பணத்தை செலுத்தி விடுகிறார். சில நாட்கள் கழித்து அதே நபர், இந்த முறை கூடுதல் தொகையை செலுத்த கோருகிறார்.

சம்பந்தப்பட்ட பேர்வழி யார்? எங்கிருந்து நம்மை மிரட்டி பணம் பறிக்கிறார்? என தெரியாமலும், அதை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என தெரியாமல் விழிபிதுங்கி கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விரக்தியின் விளம்பு நிலைக்கு சென்று விடுகிறார்கள்.

பொதுமக்கள் உஷார்

திருச்சியில் பலர், இதுபோன்ற வாட்ஸ்-அப் அழைப்பு மூலம் இளம்பெண்களின் ஆபாச செய்கைகளுக்கு உட்பட்டு இளைஞர்கள் பலர் மாட்டிக்கொண்டு முழிக்கும் நிலையில் உள்ளனர். தற்போது இதுபோன்ற மோசடி குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘நவீன தொழில் நுட்பங்கள் வந்து விட்டதால் மோசடி ஆசாமிகளும் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். எனவே, சமூக வலைதளங்களில் இருப்பவர்கள், புரோபைலில் தங்களது சுய தகவல்களை குறிக்கும்போது தயவு செய்து செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டாம். மோசடி ஆசாமிகள், முகநூல் உள்ளிட்டவைகளில் சென்று உங்களது செல்போன் எண்ணை எடுத்துதான் இதுபோன்ற வாட்ஸ்-அப் அழைப்புகளில் வருகிறார்கள். எனவே, உஷாராக இருங்கள். முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வாட்ஸ்-அப் அழைப்புகளை புறக்கணியுங்கள்‘ என்றனர்.

Next Story