இளம்பெண்ணின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி நகை பறிப்பு 3 பேர் மீது வழக்கு


இளம்பெண்ணின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி நகை பறிப்பு 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 Nov 2020 11:05 PM GMT (Updated: 10 Nov 2020 11:05 PM GMT)

இளம்பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி நகை பறித்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

அம்பை, 

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கு வேறு ஒரு கிராமத்தை சேர்ந்தவருடன் திருமணம் ஆகி உள்ளது. இந்த நிலையில் திருமணத்துக்கு முன்பு அந்த பெண், சாலமன் (வயது 24) என்பவரை காதலித்து உள்ளார். அப்போது அவர்கள் செல்போனில் பேசியதையும், அந்த பெண்ணின் சில ஆபாச படங்களையும் சாலமன் எடுத்து வைத்து உள்ளார்.

திருமணத்துக்கு பிறகு சாலமன் அந்த பெண்ணிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதுடன் பணம் தராவிட்டால் காதலித்தபோது எடுத்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். அவ்வாறு சாலமன் தனது நண்பர்கள் மனோ சேட் தவமணி (25), ஜான்சன் (24) ஆகியோருடன் சேர்ந்து அந்த பெண்ணிடம் சுமார் 2½ பவுன் தங்க சங்கிலி, மோதிரங்களை பறித்ததாக கூறப்படுகிறது. மேலும், பணம் கேட்டு மிரட்டி அந்த பெண்ணின் சில படங்களை அவரது கணவருக்கும் அனுப்பி உள்ளனர். இதையடுத்து அவர் அந்த பெண்ணை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டார்.

3 பேர் மீது வழக்கு

இதுகுறித்து அந்த பெண் தரப்பில் சேரன்மாதேவி கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், சாலமன் உள்ளிட்ட 3 பேர் மீதும் முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஜான்சன் ஏற்கனவே இதேபோல் இன்னொரு பெண்ணை மிரட்டி பணம் கேட்ட வழக்கில் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story