இரணியல் அருகே பரபரப்பு: விபத்தில் வாகனம் சிக்கியதால் ரேஷன் அரிசி கடத்தல் அம்பலம் - டிரைவர் கைது
இரணியல் அருகே ரேஷன் அரிசி கடத்திய வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு.
பத்மநாபபுரம்,
இரணியலில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் நேற்று மாலை ஒரு வேன் அரிசி மூடைகளுடன் வேகமாக சென்று கொண்டிருந்தது. மேக்கோடு பகுதியில் சென்றபோது வேனின் பின்பக்க டயர் வெடித்து விபத்தில் சிக்கியது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். ஆனால், வாகனத்தில் இருந்த அரிசி மூடைகள் சாலையில் விழுந்து சிதறின.
இதனை கண்ட பொதுமக்கள் இரணியல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குமரி மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் இருந்து ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வேனில் இருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அத்துடன் வேனை ஓட்டி வந்த பாறசாலை வெலியன்கோட்டுகோணம் பகுதியை சேர்ந்த அனுமுத்குமாரை (வயது 43) கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி நாகர்கோவில் உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story