மின் முத்திரை தாள்கள் ஆன்லைனில் வழங்கும் சேவை அமைச்சர் ஷாஜகான் தொடங்கி வைத்தார்
நீதித்துறை அல்லாத மின் முத்திரை தாள்களை ஆன்லைனில் வழங்கும் சேவையை அமைச்சர் ஷாஜகான் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு மின் முத்திரைத்தாள் முறையை 2012-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இதற்காக ஒரு தனியார் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி புதுச்சேரி முத்திரை விதிகள் வகுக்கப்பட்டு பதிவு துறையில் அங்கீகரிக்கப்பட்ட இடைத்தரகர்கள் மற்றும் சேகரிப்பு மையங்கள் மூலம் மின்னணு முறையில் உருவாக்கப்பட்ட முத்திரைத்தாள் வழங்கும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில் சமீப காலமாக பத்திரப்பதிவுக்காக மட்டுமல்லாமல் வேறு நோக்கங்களுக்காக குறைந்த மதிப்பு கொண்ட மின் முத்திரை தாள்களை பெறுவதற்காக துணை பதிவகங்களில் நிறுவப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பு மையங்களை ஏராளமான பொதுமக்கள் அணுகி வருகின்றனர். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரூ.500 வரை மதிப்பு கொண்ட மின் முத்திரை தாள்களை ஆன்லைன் வழியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தொடக்க விழா
இந்தநிலையில் வழுதாவூர் சாலையில் உள்ள புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் நீதித்துறை அல்லாத மின் முத்திரை தாள்களை ஆன்லைனில் வழங்கும் சேவைக்கான தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு வருவாய்த்துறை செயலரும், கலெக்டருமான அருண் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், மின் முத்திரை தாள்களை ஆன்லைனில் வழங்கும் சேவையை தொடங்கி வைத்தார். விழாவில் சப்-கலெக்டர்கள் அஸ்வின் சந்துரு, சுதாகர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சேகரிப்பு மையங்கள்
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ரூ.500 வரை மதிப்பு கொண்ட முத்திரை வரி செலுத்த விரும்புவோர் https://www.shc-i-l-est-a-mp.com என்ற வலைதளத்தில் சென்று தேவையான விவரங்களை பதிவிட்டு மின்னணு கட்டண முறையை தேர்ந்தெடுத்து கட்டணம் செலுத்த வேண்டும். மின் முத்திரை சான்றினை ஒரு முறை மட்டுமே வலைதளத்தில் இருந்து நேரடியாக ‘ஏ4’ தாளில் பெறமுடியும்.
ரூ.500-க்கு மேல் மதிப்புள்ள மின் முத்திரைதாள்களை பெற அந்தந்த துணை பதிவகங்களில் நிறுவப்பட்ட சேகரிப்பு மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இடைத்தரகர்களை அணுகி பெறலாம். மேலும் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களால் ஏற்படுத்தப்படும் மின்னணு ஆவண ஒப்பந்தத்திற்கான மின் முத்திரை கட்டண முறையும் புதுவையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story