தீபாவளி பண்டிகையையொட்டி பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி - ஒரு கிலோ கனகாம்பரம் - ரூ.1,000, மல்லிகை, முல்லை - ரூ.800


தீபாவளி பண்டிகையையொட்டி பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி - ஒரு கிலோ கனகாம்பரம் - ரூ.1,000, மல்லிகை, முல்லை - ரூ.800
x
தினத்தந்தி 11 Nov 2020 10:15 PM GMT (Updated: 12 Nov 2020 2:04 AM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வடகாடு,

வடகாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், அரளி, பிச்சி, சம்பங்கி, ரோஜா, சென்டி போன்ற பூக்கள் விளைவிக்கப்படுகிறது. இப்பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களை வியாபாரிகள் நல்ல விலைக்கு வாங்கி செல்வார்கள்.

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த விவசாயிகள் தற்போதுதான் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார்கள். இருந்தாலும், பெரிய அளவிலான கோவில் விழாக்கள், சுப முகூர்த்த காரியங்கள் இல்லாததால் போதிய அளவுக்கு பூக்கள் விற்பனையாகாமல் இருந்தது.

ஆயுத பூஜைக்கு பூக்கள் தேவை அதிகமாக இருந்ததால் இந்த பகுதிகளில் விளைவிக்கப்பட்ட பூக்களுக்கு நல்ல விலை கிடைத்தது. அதற்கு அடுத்தடுத்த நாட்களில் பூக்கள் விலையில் சரிவு ஏற்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி பூக்கள் தேவைப்பாடு அதிகமாக இருப்பதால் அதன் விலை அதிகரித்தது.

இந்த பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்கள் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, குளமங்கலம் போன்ற ஊர்களில் உள்ள கமிஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அங்கு பூக்கள் மொத்தமாக வாங்கப்பட்டு கீரமங்கலம் பூ கமிஷன் கடைக்காரர்கள் மூலமாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி பூக்கள் விலை(1 கிலோ) விவரம் வருமாறு:-

கனகாம்பரம் கிலோ ரூ.1000, மல்லிகை-ரூ.800, முல்லை-ரூ.800, காக்கரட்டான்-ரூ.800, அரளி-ரூ.70, சென்டி-ரூ.70, பிச்சி-ரூ.50, ரோஜா- ரூ.40 என்ற விலையில் வாங்கப்படுகிறது. இந்த விலை அடுத்தடுத்த நாட்களில் மேலும் உயரலாம் என்றும் கூறப்படுகிறது. பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story
  • chat