வாக்காளர் பட்டியல் திருத்த முகாமின் போது படிவங்கள் முறையாக வழங்க வேண்டும் கலெக்டரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு
மாவட்டத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள வாக்காளர் சுருக்க திருத்த முகாமின் போது 3 வகை படிவங்களையும் முறையாக வழங்க கோரி கலெக்டரிடம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி. மனு கொடுத்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கண்ணனை சந்தித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், தங்கபாண்டியன், தி.மு.க. எம்.பி. தனுஷ் குமார் ஆகியோர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாமின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பேட்டி
இதையடுத்து சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த வாரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடந்த வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாமின் போது வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் மாற்றம் ஆகியவற்றுக்கான படிவங்கள் முறையாக வழங்கப்படவில்லை. அதிலும் குறிப்பாக நீக்கத்திற்கான படிவங்கள் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் கொண்டு வரப்படவில்லை.
இதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் இறந்தவர்களின் பெயர் நீக்குவதற்கு இறப்பு சான்றிதழ் தேவை என கூறப்படுவதால் அனைவராலும் சான்றிதழ் வழங்கவாய்ப்பு இருக்காது.
நடவடிக்கை
எனவே உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் உள்ள இறந்தவர்களின் பட்டியலின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினோம்.
கலெக்டர் அதற்கு ஒப்புக்கொண்டார். மேலும் மாற்றத்திற்கான படிவங்களும் முறையாக வழங்கப்பட வேண்டுமென கேட்டு கொண்டு அதற்கும் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். அடுத்த மாதம் நடைபெற உள்ள முகாமின் போது இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story