புதுச்சேரி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி கவர்னருக்கு கடிதம்; அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி
அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி கவர்னரை சந்தித்து கடிதம் வழங்க உள்ளோம் என்று அன்பழகன் எம்.எல்.ஏ கூறினார்.
புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புயல் நிவாரணம்
சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக புதுவையில் ரூ.400 கோடி சேதம் என கூறி, முதல் கட்டமாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் கவர்னர் கிரண்பெடி அதிகாரிகள் ஆய்வின்படி ரூ.13 கோடி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
புயல் காரணமாக உடமைகளை இழந்துள்ள மக்களுக்கு தேவையான நிதியை பெற்று தர வேண்டிய முதல்-அமைச்சர் கவர்னருடன் இணக்கமாக செல்லாததால் புதுவைக்கு மத்திய அரசிடம் புயல் நிவாரண நிதி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு
புதுச்சேரியில் தற்போது நடைபெற்று வரும் காங்கிரஸ்- தி.மு.க. ஆட்சியால் மக்களுக்கு எந்த ஒரு சிறு நன்மையும் பெற்றுத்தர முடியவில்லை. இந்த ஆட்சி வெகு விரைவில் அகற்றப்படும். சமீபத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஜான்குமார், பா.ஜ.க. பொறுப்பாளரை சந்தித்து பேசியுள்ளார். தேவைப்பட்டால் விரைவில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவேன் என்றும் கூறியுள்ளார்.
இதன் மூலம் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. எனவே புதுவை மாநில அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி அ.தி.மு.க. சார்பில் இன்னும் ஓரிரு தினங்களில் கவர்னரை சந்தித்து கடிதம் கொடுக்க உள்ளோம். செயல்படாத முதல்-அமைச்சர் நாராயணசாமி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
எதிர்ப்பை தெரிவிப்போம்
மத்திய மருத்துவ கவுன்சில் ஆணைப்படி புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 50 சதவீத இடத்தை பெற வேண்டும். ஆனால் அதனை பெற இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த தேர்தல் வாக்குறுதி அளித்தபடி 50 சதவீத இடஒதுக்கீடு பெறுவதற்கு சட்ட மசோதா இதுவரை சட்டப்பேரவையில் கொண்டு வரவில்லை.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தி.மு.க. எம்.பி. ராசாவுக்கு தமிழக அரசை பற்றி பேச தகுதியில்லை. இனி ஒருமுறை அவர் அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை பற்றி அவதூறாக பேசினால் அவர் புதுச்சேரி எல்லைக்குள் நுழைய முடியாதபடி எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கட்சியின் துணை செயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story