பணம் கேட்டு மிரட்டியதால் கோவையில் ரவுடி வெட்டிக்கொலை கத்தியுடன் 3 பேர் போலீசில் சரண்


பணம் கேட்டு மிரட்டியதால் கோவையில் ரவுடி வெட்டிக்கொலை கத்தியுடன் 3 பேர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 15 Dec 2020 1:27 AM GMT (Updated: 15 Dec 2020 1:27 AM GMT)

கோவையில் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற 3 பேர் கத்தியுடன் போலீசில் சரணடைந்தனர்.

கணபதி,

கோவை கணபதி மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கரண் குமார் (வயது 23). ரவுடியான இவர் மீது கோவை காட்டூர், ரத்தினபுரி, பீளமேடு, சரவணம்பட்டி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்பட 8 வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்த இவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளாார். இந்த நிலையில் அதே பகுதியில் ரவிசங்கர் (22), சீனிவாசன் (23), முத்துக்கணேஷ் (24) ஆகிய 3 பேர் சுற்றித்திரிந்தனர். இதில் ரவிசங்கர் தலையில் அதிகமாக முடி வளர்ந்து இருந்தாக தெரிகிறது. இதனைக்கண்ட கரண்குமார், ரவிசங்கரை நீ என்ன ரவுடிபோன்று முடிவெட்டாமல் இருக்கிறாய். போய் முடிவெட்டிவிட்டு வா... என்று கூறியுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கு இருந்து சென்றுவிட்டனர்.

வெட்டிக்கொலை

இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை ரவிசங்கர், சீனிவாசன், முத்துக்கணேஷ் ஆகியோர் மூகாம்பிகை நகர் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த கரண்குமார் ஆட்டோவை வழிமறித்து ரவிசங்கரை பார்த்து முடிவெட்ட கூறினேனே ஏன் வெட்டவில்லை என்றுகேட்டதோடு, 3 பேரிடமும் பணம் கேட்டும் மிரட்டியதாக தெரிகிறது.

இதுதொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரவிசங்கர் தனது நண்பர்கள் சீனிவாசன், முத்துக்கணேஷ் ஆகியோரின் உதவியுடன் ஆட்டோவில் கிடந்த இரும்பு கம்பியால் கரண்குமாரை தாக்கினார். பின்னர் 3 பேரும் சேர்ந்து வெட்டுக்கத்தியால் சரமாரியாக கரண்குமாரை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் கரண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

3 பேர் சரண்

இதற்கிடையில், போலீசாருக்கு பயந்த ரவிசங்கர், சீனிவாசன், முத்துக்கணேஷ் ஆகியோர் அதே ஆட்டோவில் வெட்டுக்கத்தியுடன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். கோவையில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story